Last Updated : 08 Aug, 2020 01:27 PM

 

Published : 08 Aug 2020 01:27 PM
Last Updated : 08 Aug 2020 01:27 PM

மளிகைக் கடைகளில் பணியாற்றுவோர், காய்கறி வியாபாரிகள் உள்ளிட்டோருக்கு கரோனா பரிசோதனை: மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்

கோப்புப் படம்.

புதுடெல்லி

மளிகைக் கடைகளில் பணியாற்றுவோர், காய்கறி வியாபாரிகள், சாலைகளில் வியாபாரம் செய்பவர்கள் ஆகியோர் பல்வேறு தரப்பட்ட மக்களைச் சந்திக்ககூடியவர்கள். அவர்கள் மூலம் கரோனா பரவாமல் இருக்க, கரோனா பரிசோதனை நடத்த வேண்டும் என்று மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

வியாபாரிகளுக்குப் பரிசோதனை செய்து கரோனா வைரஸைத் தொடக்கத்திலேயே கண்டறிந்து சிகிச்சையளிக்கும்போது இறப்பு வீதம் வெகுவாகக் குறையும் என்று மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மத்திய சுகாதார அமைச்சகத்தின் செயலாளர் ராஜேஷ் பூஷன் அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரேதச நிர்வாகங்களுக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டு இருப்பதாவது:

''நாட்டில் கரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்து, புதிய இடங்களில் பரவி வருகிறது. கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரை அழைத்துச் செல்ல ஆம்புலன்ஸ் இல்லாமல், அவர்கள் உயிரிழக்கும் சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருகின்றன.

இதைத் தடுக்கும் வகையில் ஆம்புலன்ஸ்களைத் தயாராக வைத்திருக்கவும், அதில் ஆக்ஸிஜன் மற்றும் உயிர்காக்கும் மருந்துகள், கருவிகளை வைத்திருக்கவும் மாநில அரசுகளுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும் அறிவுறுத்தப்படுகிறது. ஆம்புலன்ஸ் இல்லாததால் உயிரிழப்பு ஏற்பட்டது என்ற நிலை ஏற்படக்கூடாது.

கரோனா வைரஸ் புதிய இடங்களில் பரவி வருகிறது. அதாவது மாவட்டங்களில், கிராமங்களில் இதுவரையில்லாத பகுதிகளில் பரவி வருகிறது. இதைத் தடுக்க வேண்டும். அதிலும் புதிதாக ஒரு இடத்தில் கரோனா தொற்று ஏற்படாமல் தடுக்க வேண்டும். உயிரிழப்பு ஏற்படுவதை முடிந்தவரை தடுக்க முயல வேண்டும்.

கரோனா வைரஸ் தொற்றுக்கு எதிரான போரில் உலக அளவில் மற்ற நாடுகளைவிட இந்தியா சிறப்பாகவே செயல்பட்டு வருகிறது. நம்முடைய நோக்கம் கரோனா வைரஸால் ஏற்பட்டுவரும் உயிரிழப்பை ஒரு சதவீதமாகக் குறைக்க வேண்டும்.

கரோனா நோயாளிகளைத் தொடக்கத்திலேயே கண்டுபிடித்தல், தீவிரமான பரிசோதனை, தனிமைப்படுத்துதல், மருத்துவ வசதிகளை ஏற்படுத்துதல், முறையான கிளினிக்கல் பரிசோதனை போன்றவை மூலம் கரோனா மூலம் ஏற்படும் உயிரிழப்பைத் தடுக்க முடியும்.

இன்ப்ளூயன்ஸா காய்ச்சல், நுரையீரல் தொடர்பான நோய்கள் போன்றவை இருக்கிறதா என்பதையும், அதற்கான அறிகுறிகள் இருக்கிறதா என்பதையும் வீட்டுக்கு வீடு பரிசோதனை செய்து உறுதி செய்ய வேண்டும்.

யாருக்கேனும் கரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டால், அவருடன் தொடர்பில் இருந்தவர்களை அடையாளம் காண வேண்டும். கரோனாவில் பாதிக்கப்பட்ட ஒருவருடன் குறைந்தபட்சம் 30 பேர் தொடர்பில் இருப்பார்கள். அவர்களில் 80 சதவீதம் பேரை 72 மணிநேரத்துக்குள் கண்டுபிடித்து தனிமைப்படுத்த வேண்டும்.

தொழிற்சாலைகள் அதிகம் இருக்கும் பகுதிகள், சந்தைகள் இருக்கும் பகுதி, மக்கள் நடமாட்டம் இருக்கும் பகுதி, முதியோர் இல்லம், குடிசைவாழ் பகுதி போன்றவற்றில் கரோனா பரிசோதனை நடத்தி ஆய்வு செய்யவேண்டும்.

குறிப்பாக சூப்பர் ஸ்ப்ரெட்டர்கள் என்று அழைக்கப்படும் மளிகைக் கடைகள் , காய்கறிக் கடைகள், அதில் பணியாற்றுவோர், பிற வியாபாரிகள் ஆகியோர் பல்வேறு தரப்பட்ட மக்களை நேரடியாகச் சந்திக்கக் கூடியவர்கள். இவர்களுக்கு அதிகமான முக்கியத்துவம் அளித்து ஐசிஎம்ஆர் விதிமுறைகள்படி கரோனா பரிசோதனை நடத்தப்பட வேண்டும்.

கரோனா வைரஸ் தொற்றின் தாக்கம், பாதிப்பு, உயிரிழப்பு, குணமடைந்தவர்கள் ஆகியோர் குறித்து வாரந்தோறும் மாநில, யூனியன் பிரதேச நிர்வாகங்கள் தணிக்கை செய்து ஆய்வு செய்ய வேண்டும்.

குறிப்பிட்ட கால இடைவெளியில் வீடுகளில் பரிசோதனை செய்து, நோய்த் தொற்றுக்கு அதிகமான வாய்ப்புள்ள முதியோர், குழந்தைகள், கர்ப்பிணிப் பெண்கள், இணை நோய்கள் இருப்பவர்களைப் பரிசோதிக்க வேண்டும்.

தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகள், கரோனா தொற்று திரள் இருக்கும் பகுதிகளுக்கு அதிகமான முக்கியத்துவம் அளித்து அங்கு பரிசோதனை நடத்தப்பட வேண்டும்''.

இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x