Published : 08 Aug 2020 09:24 AM
Last Updated : 08 Aug 2020 09:24 AM

225 ரூபாய்க்கு கரோனா தடுப்பு மருந்து: பில்கேட்ஸ் அறக்கட்டளையுடன் சீரம் மருந்து நிறுவனம் ஒப்பந்தம்

பிரதிநிதித்துவப் படம்.

புதுடெல்லி

இந்தியா உள்ளிட்ட நடுத்தர வருமானம் உள்ள நாடுகளுக்கு உதவும் வகையில் கரோனா தடுப்பு மருந்துகளை ரூ.225-க்கு (3 அமெரிக்க டாலர்) வழங்க முடியும். இதற்காக பில் மற்றும் மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளையுடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக சீரம் இன்ஸ்டிடியூட் ஆஃப் இந்தியா மருந்து நிறுவனம் தெரிவித்துள்ளது.

உலக அளவில் மிகப்பெரிய மருந்து தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான சீரம் இன்ஸ்ட்டிடியூட் ஆஃப் இந்தியா நிறுவனம், கரோனா தடுப்பு மருந்துக் கண்டுபிடிப்பில் முன்னணியில் இருந்துவரும் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்துடன் இணைந்து செயல்பட்டு வருகிறது.

ஆக்ஸ்போர்ட், அஸ்ட்ரா ஜெனிகா நிறுவனம் கரோனா தடுப்பு மருந்துகளை இந்தியாவில் மனிதர்களுக்குச் செலுத்திப் பரிசோதிக்கும் கிளினிக்கல் பரிசோதனை 2-வது மற்றும் 3-வது கட்ட ப் பரிசோதனைகயை விரைவில் தொடங்க உள்ளது.

இதுவரை பல்வேறு நாடுகளில் நடந்த கிளினிக்கல் பரிசோதனையில் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் தயாரித்த கரோனா தடுப்பு மருந்துகள் நல்ல பலன்களையும், முன்னேற்றத்தையும் அளித்துள்ளன. இதனால், அடுத்த ஆண்டு தொடக்கத்தில் இந்த மருந்து உலகம் முழுவதும் ஆக்ஸ்போர்ட் தடுப்பு மருந்து அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் தவிர்த்து, அமெரிக்காவின் நோவாக்ஸ் நிறுவனம் தயாரித்த கரோனா தடுப்பு மருந்தும் மனிதர்கள் மீதான கிளினிக்கல் பரிசோதனையில் நல்ல பலன்களை அளித்துள்ளன.

இந்நிலையில் கரோனா தடுப்பு மருந்துகள் அனைத்துத் தரப்பு மக்களுக்கும் எளிதாகக் கிடைக்கும் வகையில் பில் மற்றும் மெலிண்டா கேட்ஸ் நிறுவனத்துடன் சீரம் மருந்து நிறுவனம் ஒப்பந்தம் செய்துள்ளது.

இதுகுறித்து சீரம் இன்ஸ்ட்டிடியூட் ஆஃப் இந்தியா வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது:

“இந்தியா உள்ளிட்ட நடுத்தர வருமானம் உள்ள 92 நாடுகளில் உள்ள மக்களுக்குக் கரோனா தடுப்பு மருந்து எளிதாகக் கிடைக்கும் வகையில் பில் மற்றும் மெலிண்டா கேட்ஸ் நிறுவனத்துடன் சீரம் நிறுவனம் ஒப்பந்தம் செய்துள்ளனது.

இதன்படி இந்தியா உள்ளிட்ட நடுத்தர வருமானம் உள்ள நாடுகளுக்கு கரோனா தடுப்பு மருந்தை 3 டாலர் அதாவது 225 ரூபாய்க்கு வழங்க முடியும். இதற்காக பில்கேட்ஸ் அறக்கட்டளை ரூ.1,125 கோடி வழங்குகிறது. இதன் மூலம் 10 கோடி மருந்துகளை நடுத்தர வருமானம் உள்ள நாடுகளுக்கு சீரம் நிறுவனம் வழங்கும்.

ஏற்கெனவே ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் தயாரிக்கும் மருந்து நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்திருந்த நிலையில் இப்போது புதிதாக கவி (gavi) நிறுவனத்துடனும் ஒப்பந்தம் செய்திருக்கிறோம்.

உலக சுகாதார அமைப்பு கரோனா தடுப்பு மருந்துக்கு ஒப்புதல் அளித்தபின், எங்கள் நிறுவனத்தின் சார்பில் உற்பத்தி தொடங்கிவிடும். இந்தியா உள்ளிட்ட நடுத்தர வருமானம் உள்ள நாடுகளுக்கு அடுத்த ஆண்டு நடுப்பகுதிக்குள் தடுப்பு மருந்துகள் கிடைக்கும்.

உலகம் முழுவதும் மிகப்பெரிய அளவில் கரோனா வைரஸ் பரவி நிலையற்ற தன்மையை மக்கள் மனதில் உருவாக்கியுள்ளது. மக்கள் அனைவருக்கும் கரோனா தடுப்பு மருந்து செலுத்தப்பட்டு, கரோனா பரவலைத் தடுப்பது அவசியம். அதிலும் ஏழை நாடுகளில் உள்ள மக்களுக்குக் குறைந்த விலையில் கரோனா தடுப்பு மருந்து கிடைக்க உறுதி செய்ய வேண்டும்''.

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x