

புதிய கொள்கையின்படி தலைநகர் டெல்லியில் பதிவு செய்யப்படும் பேட்டரி வாகனங்களுக்கு, சாலை வரி மற்றும் வாகனப் பதிவு கட்டணம் முழுமையாக ரத்து செய்யப்படும். அத்துடன் புதிய பேட்டரி கார்களுக்கு ரூ.1.5 லட்சம் வரை மானிய உதவி வழங்கப்படும் என்று முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் அறிவித்துள்ளார்.
இந்த புதிய கொள்கை தொடர்பாக ஊடகங்களுக்கு ஆன்லைன் மூலம் பேட்டியளித்த கேஜ்ரிவால், ‘‘இந்த புதியகொள்கை மூலம் பொருளாதாரம் வளரும். இதன் மூலம் வேலை வாய்ப்புகள் அதிகரிக்கும். டெல்லியில் வாகன புகையைக் குறைக்க இது உதவும்’’ என்று குறிப்பிட்டார்.
நாட்டிலேயே முன்னோடி கொள்கையை தனது அரசு அறிமுகம் செய்துள்ளதாக அவர் குறிப்பிட்டார். இந்தக் கொள்கையின்படி பேட்டரியில் ஓடும் இரு சக்கர வாகனங்கள், ஆட்டோ மற்றும் இ-ரிக் ஷாக்களுக்கு ரூ.30 ஆயிரம் மானியம் வழங்கப்படும் என்றார். இப்புதிய கொள்கையால் அடுத்த 5 ஆண்டுகளில் சுமார் 5 லட்சம் பேட்டரி வாகனங்கள் தலைநகர் டெல்லியில் பதிவாகும் என்று எதிர்பார்க்கப்படுவதாக அவர் கூறினார்.
அவர் மேலும் கூறும்போது, ‘‘இப்புதிய கொள்கையை அமல்படுத்துவதற்காக, ‘எலெக்ட்ரிக் வாகன செல்’ என்ற தனிப் பிரிவு உருவாக்கப்பட்டுள்ளது. இத்துடன் டெல்லியில் மாநில பேட்டரி வாகன வாரியம் உருவாக்கப்படும். இதேபோல பேட்டரி வாகனங்களுக்கு சார்ஜ் செய்வதற்கான மையங்கள் உருவாக்கவும் மானியம் அளிக்கப்படுகிறது. இதன் காரணமாக ஓராண்டில் 200 சார்ஜிங் மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது’’ என்று தெரிவித்தார்.