Last Updated : 07 Aug, 2020 03:28 PM

 

Published : 07 Aug 2020 03:28 PM
Last Updated : 07 Aug 2020 03:28 PM

இந்தியாவின் முதல் ‘விவசாயி ரயில்’: மகாராஷ்டிராவிலிருந்து பிஹார் புறப்பட்டது

கோப்புப் படம்.

மும்பை

வேளாண் பொருட்களை மட்டும் கொண்டு செல்வதற்காக தொடங்கப்பட்ட விவசாயி ரயில் மகாராஷ்டிராவின் நாசிக் மாவட்டம், தேவ்லாலி நகரிலிருந்து பிஹாரின் தனாபூருக்கு இன்று காலை புறப்பட்டது. இந்த ரயிலை மத்திய அமைச்சர் நரேந்திர சிங் தோமர் காணொலி மூலம் தொடங்கி வைத்தார்.

விவசாயிகளின் நலனுக்காகவும், வேளாண் பொருட்களை மட்டும் கொண்டு செல்ல பிரத்யேகமாக தனி ரயில் விடப்படும் என்று நடப்பு நிதியாண்டு பட்ஜெட் தாக்கலின்போது நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்திருந்தார்.

எளிதில் அழுகும் காய்கறிகள், பழங்கள், பூக்கள் போன்ற வேளாண் பொருட்களை மட்டும் கொண்டு செல்ல கிசான் ரயில் (விவசாயி ரயில்) இயக்க ரயில்வே முடிவு செய்தது.

இதன்படி நாசிக் மாவட்டம், தேவ்லாலி நகரிலிருந்து இன்று காலை 11 மணிக்கு பிஹார் மாநிலம் தனாபூருக்கு கிசான் ரயில் புறப்பட்டது. இந்த ரயிலை மத்திய பஞ்சாயத்துராஜ் மற்றும் வேளாண் அமைச்சர் நரேந்திரசிங் தோமர், ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் ஆகியோர் காணொலி மூலம் தொடங்கி வைத்தனர்.

வாரம் ஒருநாள் இயக்கப்படும் இந்த கிசான் ரயில் 1,519 கி.மீ. பயணம் செய்து, ஏறக்குறைய 32 மணிநேரப் பயணத்துக்குப் பின் சனிக்கிழமை மாலை 6.45 மணிக்கு தனாபூரைச் சென்று அடையும்.

இந்த ரயில் மூலம் கொண்டு செல்லப்படும் வேளாண் பொருட்கள் பாட்னா, அலகாபாத், கட்னி, சத்னா உள்ளிட்ட மற்ற நகரங்களுக்கு அனுப்பி வைக்கப்படும்.

கிசான் ரயில் நாசிக் சாலை, மான்மாத், ஜால்கான், புசாவல், புர்ஹான்பூர், காந்த்வால, இடார்சி, ஜபல்பூர், கட்னி, மாணிக்பூர், பிரயாக்ராஜ், சேகோகி, தீனதயாள் உபாத்யாயா நகர், பக்ஸர் ஆகிய நகரங்களில் நின்று செல்லும்.

இந்த நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் நரேந்திர சிங் தோமர் பேசுகையில், “எளிதில் அழுகும் வேளாண் பொருட்களையும், காய்கறிகள், பழங்களையும் விரைவாகச் சந்தைக்குக் குறைந்த கட்டணத்தில் கொண்டு செல்ல கிசான் ரயில் உதவும்.

விவசாயி ரயிலைக் காணொலி மூலம் தொடங்கி வைத்த அமைச்சர்கள் நரேந்திர தோமர், பியூஷ் கோயல்.

96 வழித்தடங்களில் 4,610 ரயில்களை இந்திய ரயில்வே இயக்கி வருகிறது. நாட்டில் கரோனா பாதிப்பு இருந்த நேரத்திலும் மக்களுக்கு உணவுப்பொருட்கள் உரிய நேரத்தில் கிடைக்க ரயில்வே உதவி செய்தது” எனத் தெரிவித்தார்.

ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் பேசுகையில், “விவசாயிகளை அடிமைத்தனத்திலிருந்து மீட்க பல ஆண்டுகளாக பல்வேறு நடவடிக்கைகளை பிரதமர் மோடி எடுத்து வருகிறார். கிசான் ரயில் நிச்சயம் நாட்டைத் தற்சார்பு பொருளாதாரத்துக்குக் கொண்டு செல்ல விவசாயிகளுக்கு உதவும்” எனத் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x