Last Updated : 07 Aug, 2020 11:51 AM

 

Published : 07 Aug 2020 11:51 AM
Last Updated : 07 Aug 2020 11:51 AM

கோடிக்கணக்கான வரிப்பணத்தில் ராமர் கோயில் பூமி பூஜை அரசு விழாவாக நடத்தப்பட்டுள்ளது –முஸ்லிம் தனிச்சட்ட வாரிய உறுப்பினர் குற்றச்சாட்டு

புதுடெல்லி

கோடிக்கணக்கான வரிப்பணத்தில் ராமர் கோயில் பூமி பூஜை, அரசு விழாவாக நடத்தப்பட்டிருப்பதாக அகில இந்திய முஸ்லிம் தனிச்சட்ட வாரியத்தின் மூத்த உறுப்பினர் ஜபர்யாப் ஜிலானி குற்றம் சுமத்தி உள்ளார்.

ஆகஸ்ட் 5 இல் அயோத்தியில் பூமி பூஜை ஸ்ரீராமஜென்மபூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளை சார்பில் நடைபெற்றது. இதில், பிரதமர் மோடி மற்றும் உத்திரப்பிரதேச முதல்வர் யோகி ஆகியோர் கலந்துகொண்டதன் மீது கடுமையான விமர்சனங்கள் வெளியாகி வருகின்றன.

அதில், ராமர் கோயில் பூமி பூஜை விழாவில் கலந்துகொண்டது அரசியல் சாசனத்திற்கு எதிரானதாகக் கருத்து கூறப்பட்டது. இதை அகில இந்திய கட்சியி தலைவரான அசாசுத்தீன் உவைஸி, மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியின் தேசிய செயலாளர் சீதாராம் யெச்சூரி உள்ளிட்டப் பலரும் விமர்சித்திருந்தனர்.

இந்தப்பட்டியலில் கடந்த வருடம் முடிவிற்கு வந்த அயோத்தி நிலப்பிரச்சனை வழக்கில் பாபர் மசூதி தரப்பின் வழக்கறிஞருமான ஜபர்யாப் ஜிலானியும், பிரதமர் மோடியை விமர்சித்துள்ளார்.

இது குறித்து ஜபர்யாப் ஜிலானி கூறியிருப்பதாவது: அனைத்து மதத்தினருக்கும் சமஉரிமை கொண்ட இந்தியாவில் இந்து மதத்திற்கு மட்டுமான விழாவில் கலந்துகொண்டதன் மூலம், பிரதமர் மோடி இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் மரபை மீறியுள்ளார்.

மதசார்பற்ற நம் நாட்டில் பிரதமரும், மாநில முதல்வரும் ஒரு குறிப்பிட்ட மதத்தினரை சார்ந்தவர்கள் அல்ல. இந்தியப் பிரதமராகவோ, உபி முதல்வராகவோ அன்றி அவர்கள் இருவரும் தனிப்பட்ட முறையில் இவ்விவிழாவில் கலந்துகொண்டு இருந்திருக்கலாம்.

இவ்விழாவை கூர்ந்து நோக்கினால் ஒரு தனியார் விழாவாக நடைபெற்ற அதில் பிரதமரும், முதல்வரும் அரசுரீதியாகக் கலந்து கொண்டதிருப்பது தெரியும். இதற்காக அவர்கள் அரசாங்கத்தின் விமானம் மற்றும் வாகனங்களை பயன்படுத்தி உள்ளனர்.

இதற்கான ஏற்பாடுகள் செய்ய அரசு அதிகாரிகளும், அலுவலர்களும் அமர்த்தப்பட்டிருந்தனர். இதனால், பொதுமக்களின் கோடிக்கணக்கான வரிப்பணம் வீணாக்கப்பட்டுள்ளது.

ஒரு மதநிகழ்ச்சியை இருவரும் அரசாங்கத்தின் கொண்டாட்ட நிகழ்ச்சியாக நடத்தியுள்ளனர். இதில், பிரதமர் நிகழ்த்திய உரையில் பல நூற்றாண்டுகளாக நடைபெற்ற இயக்கம் விரும்பிய அதே இடத்தில் கோயில் கட்டப்பட உள்ளதாகத் தெரிவித்திருந்தார்.

அவர், இதற்கு முன் இருந்த ராமர் கோயில் உடைக்கப்பட்டதாகவும் கூறினார். இப்பிரச்சனையில் கடந்த வருடம் நவம்பரில் தீர்ப்பளித்த உச்ச நீதிமன்றம், அங்கு 12 ஆம் நூற்றாண்டிற்கு பின் கோயில் இருந்ததற்கான ஆதாரங்கள் இல்லை எனக் குறிப்பிட்டது.

இது இந்திய தொல்லியல் ஆய்வகத்தினர் வெளியிட்ட ஆய்வறிக்கையின் அடிப்படையில் கூறப்பட்டது. இச்சூழலில் அங்கு மசூதிக்காக கோயிலை இடிக்கப்பட்டதான கேள்விக்கான வாய்ப்பு எங்கு எழுந்தது?

1528 ஆம் ஆண்டில் அங்கிருந்த கோயிலை முகலாய மன்னர் பாபர் உத்தரவின் பேரில் இடித்து மசூதி கட்டப்பட்டதாக உச்ச நீதிமன்றத்தில் இந்துக்கள் தரப்பில் கூறப்பட்டது. இவர்களால், இதே இடத்தில் தான் ராமர் பிறந்தார் என்பதையும் ஆதாரபூர்வமாக நீதிமன்றத்தில் நிரூபிக்கவும் முடியவில்லை

உச்ச நீதிமன்ற உத்தரவை நாங்கள் ஏற்றுக் கொண்டோம். இந்து தரப்பிலான வாதத்தில் அங்கு 9 லட்சம் முதல் 1.5 கோடி ஆண்டுகளுக்கு முன் ராமர் பிறந்ததாகக் கூறியது பதிவாகி உள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

ஜபர்யாப் ஜிலானி குற்றச்சாட்டின் மீது பாபர் மசூதி வழக்கின் முக்கிய மனுதாரர்களில் ஒருவராக இக்பால் அன்சாரி கூறுகையில், ‘பிரச்சனைக்குரிய 2.77 ஏக்கர் நிலம் இந்து

தரப்பினரிடம் ஒப்படைக்கப்பட்டதுடன் பிரச்சனை முடிந்து விட்டது. இதில், கருத்து கூறி நான் இந்து-முஸ்லிம் நட்புறவில் மேலும்விரிசலை ஏற்படுத்த விரும்பவில்லை. எனக் கூறியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x