

ஆங்கிலேயர் காலத்திலிருந்து ரயில்வே துறையில் பின்பற்றப்பட்டு வந்த கலாசிஸ் முறை அதாவது பங்களா பியூன் இனிமேல் நியமிக்கப்படமாட்டார்கள் என்று ரயில்வே துறை அதிரடியாக முடிவு செய்து உத்தரவிட்டுள்ளது.
கலாசிஸ் அல்லது பங்களா பியூன் எனப்படுவோர் ரயில்வே உயர் அதிகாரிகளின் வீடுகளில் வேலைபார்ப்பதற்காக நியமிக்கப்படுவோர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதன்படி ரயில்வே துறை ஆகஸ்ட் 6-ம் தேதி வெளியிட்ட உத்தரவில் “ ஆங்கிலேயர் காலத்திலிருந்து ரயில்வேயில் நியமிக்கப்பட்டு வந்த தொலைபேசி உதவியாளர் மற்றும் கலாசிஸ் நியமனம் குறித்து பரிசீலிக்கப்பட்டு வருகிறது.
இந்த கலாசிஸ் முறை தொடர்வது குறித்து ரயில்வே வாரியம் பரிசீலித்து வருகிறது. ஆதலால், புதிதாக எந்தவிதமான கலாசிஸ் நியமனம் மற்றும் அல்லது மாற்று நபர் நியமிக்கப்படுவது உடனடியாக நிறுத்தி வைக்கப்படுகிறது.
2020, ஜூலை 1-ம் தேதிக்குப்பின் கலாசிஸ் முறையில் ஏதேனும் நியமனம் நடந்திருந்தால், அந்த நியமனம் குறித்து மறுஆய்வு செய்யப்படும். இதை அனைத்து ரயில்வே மண்டலங்களும் தீவிரமாகப் பின்பற்ற வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரயில்வே துறையில் குரூப் டி பிரிவில் இந்த கலாசிஸ் நியமனம் வருகிறது. தற்காலிகமாக ரயில்வேயில் உதவியாளர்களாக பணியில் சேர்ந்த 3 ஆண்டுகளுக்குப்பின் கலாசிஸ் முறையில் நியமிக்கப்படுவார்கள். இனிமேல் அந்த நியமனம் இருக்காது.
முன்பு, வெகுதொலைவில் ரயில்வே துறையில் ஒர் அதிகாரி பணியாற்றும் சூழல் ஏற்பட்டால் அவரின் குடும்பத்துக்கு பாதுகாப்பு அளிக்கும் பொருட்டு கலாசிஸ் முறை கொண்டு வரப்பட்டது, மேலும், வீட்டு வேலை, தொலைப்பேசி அழைப்புகளை ஒருங்கிணைத்தல் போன்ற பணிகளையும் கவனித்து வந்தனர்.
டிஏடிகே முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டு கலாசிஸ் முறையில் பணியாற்றியவர்கள் பதவி உயர்வு அளிக்கப்பட்டு டிக்கெட் பரிசோதகர்களாகவும், ரயில்களில் ஏ.சி.பெட்டிகளில் பணியாற்றுபவர்களாகவும் நியமிக்கப்பட்டனர். அதன்பின் காலப்போக்கில், இவர்கள் உயர் அதிகாரிகளின் வீடுகளில் பணியாற்ற மட்டும் நியமிக்கப்பட்டு வந்தனர்.
இதுபோன்று உயர் அதிகாரிகளின் வீடுகளில் பணியாற்றும் போது அந்த கலாசிஸ் பணியாளர்களிடம் அதிகாரிகள், அவர்களின் குடும்பத்தினர் அத்துமீறலில் ஈடுபடுவது, மோசமாக நடத்துவது போன்ற புகார்கள் எழுந்தன.
இதனால், கடந்த 2014-ம் ஆண்டு கலாசிஸ் முறை மறு ஆய்வு செய்ய இணைச்செயலாளர் அளவில் 9 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
டிஏடிகே பணியாளர்களின் குறைந்தபட்ச கல்வித்தகுதி என்பது 8-ம்வகுப்பு மட்டுமே. இவர்களுக்கு அதிகபட்சமாக மாதந்தோறும் ரூ.20 ஆயிரம் முதல் ரூ22 ஆயிரம்வரை ஊதியம் வழங்கப்படும். ரயில்வேயில் குரூப் டி பிரிவின் கீழ் வரும்.