ராமர் கோயில் அடிக்கல் நாட்டு விழாவை எஸ்விபிசி சேனல் நேரடி ஒளிபரப்பு செய்யாதது ஏன்?- திருப்பதி தேவஸ்தானத்துக்கு பாஜக கேள்வி

ராமர் கோயில் அடிக்கல் நாட்டு விழாவை எஸ்விபிசி சேனல் நேரடி ஒளிபரப்பு செய்யாதது ஏன்?- திருப்பதி தேவஸ்தானத்துக்கு பாஜக கேள்வி
Updated on
1 min read

ஆந்திர மாநில பாஜக துணைத் தலைவர் விஷ்ணு வர்தன் ரெட்டி விஜயவாடாவில் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:

அயோத்தியில் நம் நாட்டின் பிரதமர் கலந்து கொண்ட சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த ராமர் கோயில் அடிக்கல் நாட்டு விழாவை பிபிசி உட்பட பல வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு சேனல்களும் நேரலையில் ஒளிபரப்பின. சிறிய நிகழ்வுகளைக் கூட நேரடி ஒளிபரப்பு செய்யும் திருப்பதி தேவஸ்தானத்தின்  வெங்கடேஸ்வரா பக்தி (எஸ்விபிசி) சேனல் மட்டும் இந்நிகழ்வை ஒளிபரப்பாதது ஏன்?

சமீபத்தில் ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி, விசாகப்பட்டினம் சாரதா பீடாதிபதியை சந்தித்தது கூட இந்த சேனலில் நேரடியாக ஒளிபரப்பானது. அப்படியிருக்க பிரதமர் கலந்து கொண்ட ஒரு இந்து ஆன்மிக நிகழ்ச்சி எப்படி விட்டுப்போகும்? ராமர் கூட விஷ்ணுவின் அவதாரம் தானே? அப்படியிருக்க திருப்பதி தேவஸ்தானம் ஏன் இதை கண்டுகொள்ளவில்லை? இதுகுறித்து தேவஸ்தானம் விளக்கம் அளிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

உள்நோக்கம் இல்லை

இதுகுறித்து திருமலை திருப்பதி தேவஸ்தான தலைமை நிர்வாக அதிகாரி அனில் குமார் சிங்கால் நேற்று திருப்பதியில் செய்தியாளர்களிடம் கூறும்போது, “ராமர் கோயில் அடிக்கல் நாட்டு விழா நடக்கும்போது, திருமலையில் தினசரி நடைபெறும் திருக்கல்யாண உற்சவம் நேரடியாக ஒளிபரப்பாகிக் கொண்டிருந்தது. அதனால், ராமர் கோயில் அடிக்கல் நாட்டு விழாவை ஒளிபரப்பு செய்ய முடிய வில்லை. ஆனால், அதன் பிறகு செய்தியிலும், மற்றும் ஒரு மணி நேர சிறப்பு நிகழ்ச்சியிலும் ராமர் கோயில் அடிக்கல் நாட்டு விழா குறித்து ஒளிபரப்பானது. இதில் எந்தவொரு உள்நோக்கமும் தேவஸ்தானத்திற்கு கிடையாது” என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in