Last Updated : 07 Aug, 2020 07:48 AM

 

Published : 07 Aug 2020 07:48 AM
Last Updated : 07 Aug 2020 07:48 AM

அயோத்தி ராமர் கோயில் பூமி பூஜையின் முதல் பிரசாதம் தலித் குடும்பத்துக்கு விநியோகம்

புதுடெல்லி

அயோத்தியில் ஸ்ரீ ராமர் கோயிலுக்கான பூமி பூஜை நேற்று முன்தினம் நடைபெற்றது. உள்ளூர் மக்களுக்கான இதன் முதல் பிரசாதம் ஒரு தலித் குடும்பத்துக்கு வழங்கப்பட்டது.

கரோனா பரவல் காரணமாக, ராமர் கோயில் பூமி பூஜை விழாவில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன. இதில் ஒன்றாக அயோத்திவாசிகளில் ஒருசிலருக்கு மட்டுமே விழா அழைப்பிதழ் வழங்கப்பட்டது. என்றாலும் பூமி பூஜை பிரசாதம் அனைவருக்கும் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதன்படி ஒரு லட்டும் குங்குமமும் பிரசாதமாக அயோத்தியில் உள்ள ஒவ்வொரு வீட்டுக்கும் நேற்று வழங்கப்பட்டது.

இதில் முதல் பிரசாதம், அயோத்தியின் தலித்வாசிகளில் ஒருவரான மஹாவீர் குடும்பத்தாருக்கு வழங்கப்பட்டது. இக்கோயிலை கட்டும் ஸ்ரீராம ஜென்மபூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளை சார்பில் வழங்கப்பட்ட இந்தப் பிரசாதத்துடன் ராமச்சந்திர மானஸ் பக்தி நூலும் மஹாவீருக்கு வழங்கப்பட்டது.

இந்த ஏற்பாடு, உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் ஆலோசனையின் பேரில் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. ஏனெனில் முதல்வர் யோகிக்கு மஹாவீர் குடும்பத்தார் ஏற்கெனவே நன்கு அறிமுகமானவர்கள் ஆவர். கடந்த ஆண்டு ஏப்ரல் 17-ம் தேதி, மக்களவை தேர்தல் பிரச்சாரத்துக்கு முதல்வர் யோகி அயோத்தி வந்திருந்தார். அப்போது அனுமன் கோயில் மற்றும் ராமர் கோயிலில் தரிசனம் முடித்த முதல்வர், மஹாவீரின் வீட்டில் உணவு சாப்பிட்டார். கட்டிட மேஸ்திரியான மஹாவீர், பிரதமர் வீடு கட்டும் திட்டத்தில் பலன்பெற்று சொந்த வீட்டில் வசித்து வருகிறார்.

பிரதமர் கலந்துகொண்ட பூமி பூஜை விழா அயோத்தியில் நேற்று முன்தினம் நடைபெற்றது. இதற்கு நாடு முழுவதிலும் இருந்து இந்து மதத்தின் 36 வகை சம்பிரதாயத்தை சேர்ந்த 135 சாதுக்கள் அழைக்கப்பட்டிருந்தனர். இதில் தமக்கு அழைப்பு வரவில்லை என அலகாபாத்தில் உள்ள தலித் சமூகத் துறவியான மஹா மண்டலேஷ்வர் சுவாமி கன்னையா பிரபுநந்தன் கிரி கவலை தெரிவித்திருந்தார். இவரும் அழைக்கப்பட வேண்டும் என பகுஜன் சமாஜ் கட்சித் தலைவரும் மாநில முன்னாள் முதல்வருமான மாயாவதி கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x