Published : 07 Aug 2020 06:19 AM
Last Updated : 07 Aug 2020 06:19 AM

லடாக்கின் பாங்காங் பகுதியில் இருந்து பின்வாங்கும் பேச்சுக்கே இடமில்லை- சீனாவிடம் இந்தியா திட்டவட்டம்

புதுடெல்லி

லடாக் எல்லை விவகாரம் தொடர்பாக சீனாவுடன் பேச்சு வார்த்தை நடந்து வரும் நிலையில், பாங்காங் ஏரி பகுதியில் இருந்து தங்கள் ராணுவம் பின்வாங்காது என்று இந்தியா திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

லடாக்கில் உள்ள எல்லைக் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் கடந்த மே மாதத் தொடக்கத்தில் சீன ராணுவம் அத்துமீறி நுழைந்தது. அங்கு அசாதாரண சூழல் நிலவி வந்த நிலையில், கடந்த ஜூன் 15-ம் தேதி இரு நாட்டு ராணுவ வீரர்கள் இடையே பயங்கர மோதல் வெடித்தது.

இதில் இரு தரப்பிலும் அதிக அளவில் உயிர்ச் சேதங்கள் ஏற்பட்டன. அதன்பின், இந்தியா – சீனா இடையே போர் சூழல் நிலவியது. இதன் ஒருபகுதியாக, இரு நாடுகளும் லடாக்கில் படைக் குவிப்பில் ஈடுபட்டன.

இந்த பதற்றத்தை தணிப்பதற் காக, இந்தியா – சீனா இடையேராஜாங்க ரீதியாகவும், ராணுவகமாண்டர்கள் நிலையிலும் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இதில், கமாண்டர்கள் மட்டத்தில் 4 சுற்று பேச்சுவார்த்தைகள் முடிவடைந்துள்ளன. இதன் விளைவாக, லடாக்கின் கோக்ரா, ஹாட் ஸ்பிரிங்ஸ் உள்ளிட்ட பல பகுதிகளில் இருந்து சீன ராணுவம் பின்வாங்கியது.

எனினும், இந்திய எல்லைக்கு உட்பட்ட பாங்காங் ஏரி பகுதியில் இருந்து வெளியேற சீன ராணுவம் மறுத்து வருகிறது. இந்த விவகாரம் தொடர்பாக இரு நாட்டு ராணுவ கமாண்டர்கள் இடையே கடந்த ஞாயிற்றுக்கிழமை முதலாக 5-ம் சுற்று பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.

இதில், “பாங்காங் ஏரியில் இருந்து தங்கள் ராணுவப் படைகள் பின்வாங்க வேண்டுமெனில், இந்திய ராணுவமும் அங்கிருந்து விலக்கிக் கொள்ளப்பட வேண்டும்” என சீனா நிபந்தனை விதித்துள்ளதாக தெரிகிறது.

ஆனால், பாங்காங் ஏரியில் இருந்து படைகளை விலக்கி கொள்வதற்கான பேச்சுக்கே இடமில்லை என்று இந்தியா திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

மேலும், பாங்காங் ஏரியில் ராணுவம் தொடர்ந்து ரோந்துப் பணியில் ஈடுபடும் எனவும் இந்தியா கூறியுள்ளதாக பாதுகாப்புத் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதனால் இந்தியா – சீனா இடையேயான 5-ம் சுற்று பேச்சுவார்த்தையில் இழுபறி ஏற்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x