

கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளுக்காக தமிழகம், கேரளா, ஆந்திரா உட்பட 22 மாநிலங்களுக்கு 2-வது தவணையாக ரூ.890 கோடியை மத்திய அரசு விடுவித்துள்ளது.
இந்தியாவில் கரோனா வைரஸின் தாக்கம் கடந்த ஜனவரி மாதத்தில் தொடங்கியது. முதலில், நாளொன்றுக்கு நூற்றுக்கணக்கானோர் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டு வந்தநிலையில், தற்போது தினமும் 50 ஆயிரம் பேர் வரை கரோனாதொற்றுக்கு ஆளாகி வருகின்றனர். இதனால், இந்தியாவில்வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 19 லட்சத்தை கடந்திருக்கிறது.
ரூ.15 ஆயிரம் கோடி நிதி
இதனிடையே, நாடு முழுவதும் கரோனா தொற்றைக் கட்டுப்படுத்துவதற்காகவும் சுகாதாரக் கட்டமைப்பை மேம்படுத்துவதற்காகவும் அவசரகால நிதியுதவியாக ரூ.15 ஆயிரம் கோடியை மத்திய அரசு கடந்த ஏப்ரல் மாதம் அறிவித்தது. இதில், முதல் தவணையாக, ரூ.3 ஆயிரம் கோடியை அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய அரசு அதே மாதம் வழங்கியது.
வைரஸ் பரிசோதனை வசதிகளை அதிகப்படுத்துதல், மருத்துவமனை உள்கட்டமைப்புகளை விரிவுபடுத்துதல், மருந்து பொருட்கள் மற்றும் பரிசோதனைக் கருவிகளைக் கொள்முதல் செய்தல் ஆகியவற்றுக்காக இந்த தொகை வழங்கப்பட்டது.
இந்நிலையில், இந்த அவசரகால நிதித்தொகுப்பில் இருந்து, 2-வது தவணையாக ரூ.890.36 கோடியை 22 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய அரசு நேற்று விடுவித்துள்ளது.
தமிழகம், ஆந்திரா, கேரளா, சத்தீஸ்கர், தெலங்கானா, மத்திய பிரதேசம், ஜார்க்கண்ட், ஒடிசா, ராஜஸ்தான், கோவா, குஜராத், மேற்கு வங்கம், மணிப்பூர், மேகாலயா, பஞ்சாப், அசாம், அருணாச்சலப் பிரதேசம், சிக்கிம் உள்ளிட்ட மாநிலங்கள் இதில் அடங்கும்.
வைரஸ் பரிசோதனைகளுக்காக பொது சுகாதார உள்கட்டமைப்பை மேம்படுத்துதல், பிசிஆர் பரிசோதனை இயந்திரங்களைக் கொள்முதல் செய்தல், ஆர்என்ஏ மரபணுவை பிரித்தெடுக்கும் உபகரணங்களை வாங்குதல், அவசர சிகிச்சைப் பிரிவுகளுக்கு போதுமான படுக்கைகளை உறுதி செய்தல், ஆக்சிஜன் தொடர்பான கருவிகளை அதிகப்படுத்துதல் ஆகியவற்றுக்காக இந்த இரண்டாம் தவணை நிதியுதவி பயன்படுத்தப்படும் என மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.