Published : 06 Aug 2020 04:55 PM
Last Updated : 06 Aug 2020 04:55 PM

இனி காணொலி வாயிலாக வானிலை முன்னறிவிப்பு: வானிலை ஆய்வு மையம் புதிய முயற்சி

பிரதிநிதித்துவப் படம்

புதுடெல்லி

இந்திய வானிலை ஆய்வு மையம் வானிலை குறித்து, புதிய முயற்சியாக, ஒவ்வொரு வியாழக்கிழமை மாலையும் காணொலிக் காட்சிப் படம் ஒன்றை வெளியிட உள்ளது.

இந்த காணொலிக் காட்சிப்படத்தில் அடுத்த இரு வாரங்களுக்கான வானிலை முன்னறிவிப்பு, கடந்த வாரத்துக்கான வானிலை நிலவரம் குறித்த தகவல்களும் இடம் பெற்றிருக்கும். இந்திய வானிலை ஆய்வுத்துறையின் சிறந்த அறிவியலாளர்களால் இந்த விவரங்கள் அளிக்கப்படும். இந்த குறுங் காணொலி, ஆங்கிலத்திலும் ஹிந்தியிலும் இருக்கும். கடந்த ஒரு வார காலத்தின் முக்கிய வானிலை நிலவரங்கள், அடுத்த இரு வாரங்களில் எதிர்பார்க்கக்கூடிய வானிலை முறைகள், வானிலை தொடர்புடைய மோசமான தட்பவெப்ப நிலை குறித்தும் இக்காணொலியில் விவரங்கள் இருக்கும்.

தனி மனிதர்களுக்கான பல்வேறு செயல்பாடுகள், சமுதாயச் செயல்பாடுகள், விவசாயச் செயல்பாடுகள், நீரியல் செயல்பாடுகள் போன்றவற்றுக்கு இவ்விவரங்கள் உதவியாக இருக்கும். நாட்டின் பல்வேறு பகுதிகளில் அடுத்துவரும் இரண்டு வாரங்களுக்கு எந்தெந்தப் பகுதிகளில் மழை நாட்கள் இருக்கும், எந்தெந்தப் பகுதிகளில் வறண்ட வானிலை காணப்படும் என்று முன்கூட்டியே கணிக்கப்படுவதால், பல்வேறு விவசாயப் பணிகளைத் திட்டமிடவும் வெள்ளம், நிலச்சரிவு, இடியுடன் கூடிய மழை, மின்னல் ஆகியவை காரணமாக ஏற்படக்கூடிய இயற்கைச் சீற்றங்களை எதிர்கொள்ளவும் பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்கவும் இது உதவும்.

இந்த வாராந்திர குறுங் காணொலிகள் யூட்யூபில் காணக்கிடைக்கும் இதற்கான இந்திய வானிலை ஆய்வு மைய இணையதள இணைப்பு (https://mausam.imd.gov.in/). இந்த வாராந்திரக் காணொலி தவிர, கூடுதலாக, வானிலை விவரம் பற்றிய தினசரிக் காணொலிகளையும் இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிடுகிறது. வானிலை பற்றிய சமீபத்திய தகவல்களும், அடுத்த ஐந்து நாட்களுக்கான வானிலை முன்னறிவிப்பும் இந்த காணொலிகளில் இடம்பெறும்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x