Published : 06 Aug 2020 04:41 PM
Last Updated : 06 Aug 2020 04:41 PM

முன்னாள் காஷ்மீர் துணை நிலை ஆளுநர் முர்முவுக்கு புதிய பதவி

ஜம்மு-காஷ்மீரின் துணைநிலை ஆளுநராக இருந்த முர்மு நாட்டின் ஆடிட்டர் ஜெனரலாக ஆகஸ்ட் 8-ம் தேதி பதவி ஏற்பார் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து கடந்தாண்டு ஆகஸ்ட் 5ஆம் தேதி திரும்ப பெறப்பட்டது. அந்த மாநிலம் லடாக் மற்றும் ஜம்மு காஷ்மீர் என இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டு மத்திய அரசின் நேரடி கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டது.

லடாக் சட்டசபை இல்லாத யூனியன் பிரதேசமாகவும், காஷ்மீர் சட்டப்பேரவையுடன் கூடிய யூனியன் பிரதேசமாகவும் செயல்படடும் என அறிவிக்கப்பட்டது. ஜம்மு காஷ்மீரின் துணை நிலை ஆளுநராக கிரிஷ் சந்திரா முர்மு, அக்டோபர் 31ஆம் தேதி நியமிக்கப்பட்டார்.

9 மாதத்திற்கு பின்னர் நேற்று திடீரென தனது பதவியை ராஜினாமா செய்தார். ஜம்மு காஷ்மீர் துணை நிலை ஆளுநர் கிரிஷ் சந்திர முர்முவின் ராஜினாமாவை, குடியரசுத் தலைவர் ஏற்றுக் கொண்டுள்ளார்.

குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், ஜம்மு காஷ்மீரின் துணை நிலை ஆளுநராக மனோஜ் சின்ஹாவை நியமனம் செய்துள்ளார். கிரிஷ் சந்திர முர்மு விலகலை அடுத்து மனோஜ் சின்ஹா துணை நிலை ஆளுநராக பொறுப்பேற்கும் நாளிலிருந்து இந்த நியமனம் அமலுக்கு வரும் என குடியரசுத் தலைவர் மாளிகை தெரிவித்துள்ளது.

இந்தநிலையில் ஜம்மு-காஷ்மீரின் துணைநிலை ஆளுநராக இருந்த சந்திர முர்மு நாட்டின் ஆடிட்டர் ஜெனரல் பதவிக்கு நியமிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

தற்போதைய ஆடிட்டர் ஜெனரல் ராஜீவ் மெஹ்ரிஷிக்கு 65 வயதாகி விட்டதால், அவரது பதவி ஆகஸ்ட் 8-ம் தேததி காலியாகிவிடும் . அதனால்,அவருக்கு மாற்றாக ஒருவரை தேர்வு செய்ய வேண்டிய கட்டாயம் உள்ளது. இந்த பதவிக்கு முர்மு அமர்த்தப்படலாம் எனத் தகவல் வெளியாகின. அவர் 8-ம் தேதி பதவியேற்றுக் கொள்வார் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

கிரிஷ் சந்திரா முர்மு 1985 குஜராத் கேடர் ஐஏஎஸ் அதிகாரியாவார். நரேந்திர மோடி குஜராத் முதல்வராக இருந்த காலத்தில் அவரின் முதன்மை செயலாளராக இருந்தது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x