

மத்திய பிரதேசத்தில் கிளம்பியுள்ள வியாபம் ஊழல் குற்றச்சாட்டில் இருந்து தப்ப, அதன் புகார்தாரரிடம் முதல் அமைச்சர் சிவராஜ்சிங் சவுகான் பேரம் பேசியதாகப் புகார் கிளம்பியுள்ளது. இதற்கு ஆதாரமான அதன் உரையாடல் பதிவுகள் இருப்பதாக போபால் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
வியாபம் எனப்படும் மாநில அரசிற்கான தொழில் பணியாளர் தகுதித் தேர்வாணைய ஊழலை வெளிக் கொண்டு வந்ததில் முக்கியமானவராகக் கருதப்படுபவர் டாக்டர்.ஆனந்த் ராய். மபி மாநிலம் இந்தோரிலுள்ள அரசு மருத்துவமனையின் மருத்துவராகப் பணியாற்றி வருகிறார். இவரது மனைவியும் அதே மருத்துவமனையின் அரசு மருத்துவராகப் பணி செய்கிறார்.
ஆனந்த் ராய் கடந்த புதன் கிழமை மபி மாநில உயர் நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்துள்ளார். அதில், கடந்த ஆகஸ்ட் 11 ஆம் தேதி அரசு வீட்டிற்கு தம்மை அழைத்த முதல் அமைச்சர் சவுகான், தன் மற்றும் தனது குடும்பத்தார் மீது குற்றம் சாட்டுவதை நிறுத்தும்படி ‘பேரம்’ பேசியதாக புகார் கூறி ஒரு மனு தாக்கல் செய்துள்ளார்.
இதை விசாரணைக்கு ஏற்ற நீதிபதி, ஒரு வாரத்திற்குள் பதில் அளிக்கும்படி கேட்டு முதல் அமைச்சர் சவுகானுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார். இந்த வழக்கின் ஆதாரமாக தம்முடன் முதல்வர் சவுகான் பேசிய உரையாடல் பதிவுகள் இருப்பதாகக் கூறியுள்ளார்.
இது குறித்து ’தி இந்து’விடம் ஆனந்த் ராய் கூறுகையில், ‘முதல் அமைச்சர் வீட்டில் சிசிடிவி உட்படப் பாதுகாப்பு சோதனை கருவிகளால் என்னிடம் இருந்த இஸ்ரேலின் ரகசிய பதிவு கைக்கடிகாரத்தை கண்டுபிடிக்க முடியவில்லை. இதன் உதவியால் நான் முதல்வர் என்னிடம் பேசியதை முழுவதுமாக பதிவு செய்துள்ளேன். உளவுத்துறையின் உளவாளியாகவும் நான் பணியாற்றி இருப்பதால் இதுபோன்ற சாதனங்களை எப்படி பயன்படுத்துவது என்பதை நான் நன்கு அறிவேன்.’ எனக் கூறியுள்ளார்.
ஆனந்த் ராயின் புகார் குறித்து முதல் அமைச்சர் சவுகான், இதற்கான பதிலை முறையாக உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்வதாகவும், அங்கு நடைபெறவிருக்கும் அகில உலக இந்தி மகாநாட்டின் பணிகளில் மூழ்கி இருப்பதாகவும் கருத்து கூறியுள்ளார்.
மபியை ஆளும் பாரதிய ஜனதா கட்சி மற்றும் அதன் தாய் அமைப்பான ராஷ்ட்ரிய ஸ்வயம் சேவக் அமைப்பின் முன்னாள் உறுப்பினராக இருந்தவர் ஆனந்த் ராய். இவர், முதலில் 2013 ஆம் ஆண்டு செய்த புகாரின் பேரில் வியாபம் ஊழலில் மபி மாநில போலீஸார் வழக்கு பதிவு செய்தனர்.
தற்போது, சிபிஐ விசாரித்து வரும் வழக்கின் குற்றவாளிகள் 26 பேர், இதுவரை சந்தேகத்திற்கு இடமான வகையில் உயிரிழந்துள்ளனர். எனவே, இந்தமுறை சிவராஜ்சிங்கிற்கு எதிராக ஆனந்த ராய் முக்கிய ஆதாரம் வைத்திருப்பதால், வியாபம் வழக்கில் முக்கிய திருப்பம் ஏற்படும் எனக் கருதப்படுகிறது.