

இந்தியாவில் கரோனா வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 13 லட்சத்தைக் கடந்துள்ளது. அதேசமயம், உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 40ஆயிரத்துக்கு மேல் அதிகரித்துள்ளது என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்தின் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் கரோனாவால் புதிதாக 56 ஆயிரத்து 282 பேர் பாதிக்கப்பட்டனர். இதன் மூலம் ஒட்டுமொத்த பாதிப்பு 19 லட்சத்து 64 ஆயிரத்து 536 ஆக அதிகரித்துள்ளது. தொடர்ந்து 8-வது நாளாக நாள்தோறும் 50 ஆயிரத்துக்கும் மேல் நோய் தொற்று இருந்துவருவதால், நாளை 20 லட்சத்தை கடந்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதில் ஆறுதல் அளிக்கும் வகையில் கரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 13 லட்சத்து 28 ஆயிரத்து 336 ஆக அதிகரித்துள்ளது. குணமடைந்தோர் சதவீதம் 67.62 ஆக உயர்ந்துள்ளது.
தற்போது நாடுமுழுவதும் கரோனாவில் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 5 லட்சத்து 95 ஆயிரத்து 601 ஆக அதிகரித்துள்ளது. நாளை இந்த எண்ணிக்கை 6 லட்சத்தை எட்டிவிடும். ஒட்டுமொத்த கரோனா எண்ணிக்கையோடு ஒப்பிடும்போது, கரோனாவில் சிகிச்சை எடுப்போர் 30.31 சதவீதம் மட்டும்தான்.
கரோனாவில் கடந்த 24 மணிநேரத்தில் 904 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் ஒட்டு மொத்த உயிரிழப்பு 40 ஆயிரத்து 699 ஆக அதிகரித்துள்ளது. இருப்பினும், கரோனாவில் உயிரிழப்பு சதவீதம் என்பது 2.07 ஆகக் குறைந்துவருகிறது.
ஐசிஎம்ஆர் அளித்த தகவலின்படி, நேற்றுவரை 2 கோடியே 21 லட்சத்து 49 ஆயிரத்து 351 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டன. புதன்கிழமை மட்டும் 6 லட்சத்து 64 ஆயிரத்து 949 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன.
மகாராஷ்டிர மாநிலத்தில் நேற்று 334 பேர் உயிரிழந்ததையடுத்து, ஒட்டுமொத்த பலி எண்ணிக்கை 16 ஆயிரத்து 476ஆக அதிகரித்துள்ளது. ஒரு லட்சத்து 46 ஆயிரத்து 268 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
2-வது இடத்தில் உள்ள தமிழகத்தில் நேற்று 112 பேர் கரோனா பாதிப்பால் உயிரிழந்தனர். இதனால் பலி எண்ணிக்கை 4,461ஆக அதிகரித்துள்ளது. கரோனாவில் 54 ஆயிரத்து 184 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
டெல்லியில் 10 ஆயிரத்து 72 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கடந்த 24 மணி நேரத்தில் 11 பேர் உயிரிழந்ததையடுத்து, அங்கு ஒட்டுமொத்த உயிரிழப்பு 4,044ஆக அதிகரித்துள்ளது.
குஜராத்தில் 14ஆயிரத்து 680 பேர் சிகிச்சையில் உள்ளனர். 23 பேர் நேற்று உயிரிழந்ததையடுத்து அங்கு பலி எண்ணிக்கை 2,556 ஆக அதிகரித்துள்ளது.
கர்நாடக மாநிலத்தில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு 73,966 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் நேற்று 100 பேர் உயிரிழந்ததையடுத்து பலி எண்ணிக்கை 2,804 ஆக அதிகரித்துள்ளது.
கேரள மாநிலத்தில் 11,524 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். அங்கு பலி எண்ணிக்கை 94 ஆக அதிகரித்துள்ளது.
இவ்வாறு மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.