Last Updated : 06 Aug, 2020 09:42 AM

 

Published : 06 Aug 2020 09:42 AM
Last Updated : 06 Aug 2020 09:42 AM

8 பேர் உயிரைப் பலிவாங்கிய அகமதாபாத் கோவிட் சிகிச்சை மருத்துவமனை தீ விபத்து- பிரதமர் இரங்கல், விசாரணைக்கு உத்தரவு

அகமதாபாத்தில் உள்ள ஷ்ரே கரோனா சிகிச்சை மருத்துவமனையில் இன்று அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில் 8 நோயாளிகள் பரிதாபமாக பலியானதையடுத்து குஜராத் முதல்வர் விஜய் ரூபானி விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார்.

இந்த விசாரணையை கூடுதல் முதன்மைச் செயலர் சங்கீதா சிங் தலைமையேற்று நடத்தவிருக்கிறார்.

விசாரணை அறிக்கை 3 நாட்களுக்குள் சமர்ப்பிக்கவும் முதல்வர் ரூபானி உத்தரவிட்டுள்ளார்.

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள ஷ்ரே மருத்துவமனையில் இன்று அதிகாலை 3 மணியளவில் ஏற்பட்ட தீ விபத்தில் 8 நோயாளிகள் பரிதாபமாக பலியாகியுள்ளனர்.

மருத்துவமனையின் 4வது மாடியில் உள்ள ஐசியு வார்டில் இந்தத் தீவிபத்து ஏற்பட்டுள்ளது.

பலியானவர்களில் 5 ஆண்கள், 3 பெண்கள் அடங்குவர். இவர்கள் இங்கு சிகிச்சை பெற்று வந்த நோயாளிகள் ஆவார்கள்.

இந்த மருத்துவமனையில் பிற நோயாளிகள் 40 பேர் சிகிச்சைப் பெற்று வந்தனர். தீவிபத்தை அடுத்து இவர்கள் எஸ்விபி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

தீயணைப்பு வண்டிகள் சம்பவ இடத்துக்கு விரைந்துள்ளன. மற்ற நோயாளிகளை வெளியேற்றியதில் போலீஸார், தீயணைப்பு வீரர்க்ள் உதவினர்.

இது குறித்து அகமதாபாத் நகர உதவி ஆணையர் எஸ்பி. ஸலா கூறும்போது, “மரணமடைந்தோர் எண்ணிக்கை 8,. தீ இன்று அதிகாலை 3.30 மணியளவில் பிடித்தது. இப்போது தீ கட்டுப்படுத்தப்பட்டு விட்டது. உடல்கள் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டன. ” என்றார்.

பிரதமர் மோடி இரங்கல்:

மருத்துவமனை தீவிபத்து துன்பத்தினால் வருத்தமடைகிறேன். பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு என் ஆழ்ந்த இரங்கல்கள். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன்.

முதல்வர் விஜய் ரூபானியிடமும் மேயர் பைஜல் படேலிடமும் பேசினேன். பாதிக்கப்பட்டவர்களுக்கு அனைத்து உதவிகளும் செய்யப்படும், என்று பிரதமர் ட்வீட் செய்துள்ளார்.

பிரதமர் தேசிய நிவாரண நிதியிலிருந்து இறந்தோர் குடும்பத்துக்கு ரூ.2 லட்சமும் பாதிக்கப்பட்டோருக்கு ரூ.50,000 தொகையும் நிவாரணமாக அளிக்க அறிவித்திருப்பதாக ஏ.என்.ஐ. செய்திகள் கூறுகின்றன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x