கரோனா எதிர்ப்பு சக்தி மாத்திரையான கரோனிலுக்கு நாள்தோறும் 10 லட்சம்  ஆர்டர்கள் வருகின்றன: பாபா ராம்தேவ் பெருமிதம்

யோகா குரு பாபா ராம் தேவ் : கோப்புப்படம்
யோகா குரு பாபா ராம் தேவ் : கோப்புப்படம்
Updated on
2 min read

கரோனா வைரஸ் நோய் எதிர்ப்பு சக்தி மாத்திரையான கரோனிலுக்கு நாள்தோறும் 10 லட்சம் ஆர்டர்கள் வருகின்றன என்று யோகா குரு பாபா ராம்தேவ் பெருமிதத்தோடு தெரிவித்தார்

பதஞ்சலி நிறுவனத்தின் இயக்குநர் ஆச்சார்யா பாலகிருஷ்ணா, யோகா குரு பாபா ராம்தேவ் ஆகியோர் கரோனா நோய்க்கு தங்கள் நிறுவனம் மருந்து கண்டுபிடித்துவிட்டதாக கடந்த ஜூன் மாதம் அறிவித்து கரோனில் எனும் பெயரில் மருந்தை அறிமுகப்படுத்தினர். இந்த ஆயுர்வேத மருந்தை உட்கொண்டால் 7 நாட்களில் கரோனா நோய் குணமடையும் என்று பதஞ்சலி நிறுவனம் அறிவித்தது.

இந்த மருந்தை நூற்றுக்கும் மேற்பட்ட கரோனா நோயாளிகளுக்கு அளித்துப் பரிசோதித்ததில் அவர்கள் நோயிலிருந்து முழுமையாகக் குணமடைந்ததாகவும் பாலகிருஷ்ணா தெரிவித்தார்.

ஆனால், இதற்கு மத்திய ஆயுஷ் அமைச்சகம் எதிர்ப்புத் தெரிவித்தது. பதஞ்சலி நிறுவனம் கரோனா நோய்க்குத் தடுப்பு மருந்து கண்டுபிடித்துள்ளது என்றால், அதுகுறித்த தகவல்களை அமைச்சகத்துக்கு அனுப்பி அதைப் பரிசோதித்து உண்மையானதுதானா என ஆய்வு செய்தபின்புதான் விளம்பரம் செய்ய வேண்டும் என உத்தரவிட்டது.

மேலும்,''பதஞ்சலி நிறுவனம் தயாரித்த கரோனில் மருந்தை விற்பனை செய்வதில் எந்தவிதமான தடையும் இல்லை. அந்த மருந்து மனித உடலில் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகப்படுத்தும் மருந்து மட்டும்தான். ஆனால், கரோனா வைரஸைக் குணப்படுத்தும் மருந்து அல்ல” எனத் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

இந்த சூழலில் யோகா குரு பாபா ராம்தேவ் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார் அப்போது அவர் கூறுகையில் “ கரோனா வைரஸுக்கு எதிராக நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகப்படுத்தும் பதஞ்சலி நிறுவனத்தின் மாத்திரையான கரோனிலுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கிறது. நாள்தோறும் 10லட்சம் மாத்திரைகளுக்கான ஆர்டர்கள் வருகின்றன. சப்ளையின் அளவை நாள்தோறும் ஒரு லட்சமாக உயர்த்தவும் தொடர்ந்து முயற்சித்து வருகிறோம்.

தற்போது கரோனில் மாத்திரைகள் ரூ.500 என்ற விலையில் விற்கிறோம். ரூ.5 ஆயிரம் என்ற விலையில் கூட கரோனா வைரஸ் காலத்தில் விற்கலாம். எளிதாக ரூ.5 ஆயிரம் கோடியை சம்பாதிக்க முடியும். ஆனால், அதை நாங்கள் செய்யவில்லை. கரோனா வைரஸ் பிரச்சினை முடியும், மக்கள் நம்பிக்கையுடன், பொறுமையுடன் இருக்க வேண்டும்.

பதஞ்சலி நிறுவனத்தின் பொருட்களுக்கும், மருந்துகளுக்கும் மக்கள் மத்தியில் எப்போதும் நல்ல மதிப்பும், நம்பிக்கையும் இருந்து வருகிறது. இதற்கு நிறுவனத்தின் கடினமான உழைப்பு, நேர்மை, பாரம்பரிய மூலிகைகள் குறித்த அறிவாற்றல் ஆகியவைதான் காரணம்.

இப்போது மிகப்பெரிய நிறுவனமாக பதஞ்சலி இருக்கிறது. எங்கள் நிறுவனத்தில் தற்போது 500 அறிவியல் விஞ்ஞானிகள் பணியாற்றிவருகிறார்கள். எங்களுக்கு மூலிகை, மருத்துவம் குறித்த அறிவாற்றல், சிந்தனை இல்லாவிட்டால் இதுபோன்றவற்றை கொண்டுவந்திருக்க முடியாது. குரு சிஷ்யன் கலாச்சாரத்தில் நான் மிகுந்த நம்பிக்கை வைத்திருக்கிறேன் “ எனத் தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in