உ.பி.யின் அயோத்தியில் ராமர் கோயில் கட்ட அடிக்கல் என்னுடைய நீண்டகால கனவு நிறைவேறுகிறது: பாஜக மூத்த தலைவர் அத்வானி கருத்து

எல்.கே.அத்வானி
எல்.கே.அத்வானி
Updated on
2 min read

அயோத்தியில் ராமர் கோயில் கட்ட வேண்டும் என்ற நீண்டகால கனவு நிறைவேற உள்ளதாக பாஜக மூத்த தலைவர் அத்வானி தெரிவித்துள்ளார்.

அயோத்தியில் சர்ச்சைக்குரியதாக இருந்த நிலம் தொடர்பாக வழக்கு தொடுக்கப்பட்டது. உள்ளூர் சட்டப் பிரச்சினையாக இருந்த இதை தேசிய அளவில் கொண்டு சென்றவர் எல்.கே.அத்வானி (92). குறிப்பாக, அயோத்தியில் ராமர் கோயில் கட்ட வலியுறுத்தி ரத யாத்திரை மேற்கொண்டார். இதனால் படிப்படியாக வளர்ந்த பாஜக மத்தியில் ஆட்சியைப் பிடித்தது. ஆனால் ராமர் கோயிலுக்கான அடிக்கல் நாட்டு விழாவில் அத்வானி நேரில் பங்கேற்கவில்லை. முதுமை மற்றும் கரோனா பரவலே இதற்குக் காரணம் என கூறப்படுகிறது.

இந்நிலையில், அத்வானி நேற்று முன்தினம் ஒரு வீடியோ பதிவை வெளியிட்டார். அதில், “அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டுகிறார். இது எனக்கு மட்டுமல்ல அனைத்து இந்தியர்களுக்கும் வரலாற்று சிறப்புமிக்க மற்றும் உணர்வுபூர்வமான நாள். இந்தத் தருணத்தில், ராமஜென்ம பூமி இயக்கத்துக்கு உறுதுணையாக இருந்த அனைவருக்கும் நன்றி.

ராமர் பிறந்த இடத்தில் பிரம்மாண்ட கோயில் அமைய வேண்டும் என்பதுதான் பாஜகவின் விருப்பம். அது நிறைவேற உள்ளது. ராமர் கோயில் கட்ட வலியுறுத்தி கடந்த 1990-ம் ஆண்டு ரத யாத்திரை மேற்கொண்டேன். விதிப்படி என்னுடைய முக்கிய கடமையை ஆற்றினேன்.

சில நேரங்களில் ஒருவருடைய முக்கிய கனவு நனவாக நீண்ட காலம் ஆகும். அப்போது காத்திருந்ததற்கு பலன் கிடைத்துள்ளது என்பதை அவர் உணர்வார். இதுபோல என்னுடைய ஒரு கனவு இப்போது நிறைவேற உள்ளது” என கூறியுள்ளார்.

இந்து மறுமலர்ச்சியின் அடையாளம்

விஸ்வ இந்து பரிஷத்தின் செயல் தலைவர் அலோக் குமார் டெல்லியில் அளித்த பேட்டியில் கூறியதாவது:

அயோத்தியில் ராமர் கோயில் கட்ட பூமி பூஜை நடந்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. பல ஆண்டுகளாக நடந்த போராட்டங்களுக்கு வெற்றி கிடைத்துள்ளது. விஸ்வ இந்து பரிஷத் இந்த போராட்டங்களில் முக்கிய பங்கு வகித்தது. அயோத்தியில் ராமர் கோயிலை மற்றொரு கோயிலாக கருத முடியாது. இது இந்து மறுமலர்ச்சியின் அடையாளம்.

ராமர் கோயிலுக்கான பூமி பூஜையில் பிரதமர் மோடி கலந்து கொண்டதில் தவறு ஏதும் இல்லை. ஒவ்வொரு ஆண்டும் தசரா விழாவின்போது பிரதமர், குடியரசுத் தலைவர், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோர் டெல்லியில் நடக்கும் ராவண தகனம் நிகழ்ச்சியில் பங்கேற்கின்றனர். ரம்ஜான் மாதத்தில் எல்லா கட்சிகளும் இப்தார் விருந்து அளிக்கின்றனர். புத்த பூர்ணிமா, மகாவீர் ஜெயந்தி நிகழ்ச்சிகளிலும் அரசியல் கட்சித் தலைவர்கள் கலந்து கொள்கின்றனர். எல்லா மதத்ததையும் கொண்டாடும் நாடாக இந்தியா உள்ளது.

இப்போதைய நிலையில், அதுவும் குறிப்பாக தேர்தல் நேரத்தில் இந்துத்வா கொள்கையில் இருந்து எந்தக் கட்சியும் விலகி இருக்க முடியாத நிலை உருவாகியுள்ளது. இந்த சூழ்நிலையை மோடி தலைமையிலான அரசும் ராமர் கோயில் போராட்டமும் ஏற்படுத்தி உள்ளன. இந்த வரவேற்கத்தக்க சூழலில் விஸ்வ இந்து பரிஷத் செயல் தலைவராக இருப்பதில் பெருமைப்படுகிறேன். இந்துக்களில் சாதி வேறுபாடு இல்லாமல் எல்லாரையும் இணைத்து புதிய இந்து மறுமலர்ச்சி உருவாகும் என்று நம்பிக்கை உள்ளது.

இவ்வாறு அலோக் குமார் கூறினார்.

தொலைக்காட்சியில் பார்த்தார்..

நாட்டின் முன்னணி வழக்கறிஞர்களில் ஒருவர் கே.பராசரன் (92). தமிழகத்தைச் சேர்ந்த இவர், பல்வேறு முக்கிய வழக்குகளில் வாதாடி வெற்றி பெற்றுள்ளார். கடந்த 1983 முதல் 89 வரையில் மத்திய அரசின் தலைமை வழக்கறிஞராக பணியாற்றினார். பத்ம பூஷண் மற்றும் பத்ம விபூஷண் விருதுகளை பெற்றுள்ளார். உச்ச நீதிமன்றத்தில் நடந்த அயோத்தி நிலம் தொடர்பான மேல்முறையீட்டு வழக்கில், ராம் லல்லா அமைப்பு சார்பில் வாதாடினார். விசாரணையின்போது, வயது மூப்பு காரணமாக இருக்கையில் அமர்ந்து வாதாட பராசரனுக்கு நீதிபதிகள் அனுமதி வழங்கினர். ஆனால் அவர் நின்றபடியே வாதாடினார். இந்த வழக்கில் வெற்றியும் கிடைத்தது. நேற்று நடைபெற்ற ராமர் கோயில் பூமி பூஜையை தனது வீட்டில் இருந்தபடி தொலைக்காட்சியில் பார்த்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in