ஆந்திராவில் 31-ம் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு
ஆந்திர மாநிலத்தில் ஆகஸ்ட் மாதம் 31-ம் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு தொடரும் என்று மாநில அரசு அறிவித்துள்ளது.
ஆந்திர மாநிலத்தில் தற்போது, அனைத்து கோயில்களும் திறக்கப்பட்டுள்ளன. குறைந்த அளவிலான பேருந்துகள் இயக்கப்படுகிறன. பள்ளி - கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. மத்திய அரசு அறிவித்த 3.0 நிபந்தனைகளின் படி சில மாற்றங்களோடு ஆந்திர அரசு புதிய ஊரடங்கு நிபந்தனையை நேற்று அறிவித்தது. அதன்படி, வரும் 31-ம் தேதி வரை மத்திய அரசின் நிபந்தனைகளை பின்பற்றி ஊரடங்கு இருக்கும். இதில், 31-ம் தேதி வரை பள்ளி, கல்லூரிகள் திறக்க அனுமதி இல்லை.
இதேபோன்று, பார்கள், திரையரங்குகள், நீச்சல் குளங்களுக்கும் அனுமதி இல்லை. ஆனால், இன்று முதல் உடற்பயிற்சிக் கூடங்கள், யோகா பயிற்சி வகுப்புகளுக்கு சில நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கப்படுகிறது. தடை செய்யப்பட்ட பகுதிகளில் வரும் 31-ம் தேதி வரை ஊரடங்கு தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
திருப்பதி நகரில் நேற்று வரை காலை 6 மணி முதல் பகல் 11 மணி வரை மட்டுமே கடைகள் திறக்க அனுமதி வழங்கப்பட்டது. இது, இன்று முதல் காலை 6 மணி முதல் மதியம் 1 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
