

சசிகலாவின் சிறை முறைகேட்டை அம்பலப்படுத்திய ரூபா ஐபிஎஸ், கர்நாடக உள்துறை செயலராக நேற்று பொறுப்பேற்றுக் கொண்டார். இதன் மூலம் இந்த பதவியை வகிக்கும் முதல் பெண் என்ற பெருமையை ரூபா பெற்றுள்ளார்.
கர்நாடக காவல் துறையில் பணியாற்றிய 17 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்துமுதல்வர் எடியூரப்பா உத்தரவிட்டார். அதன்படி பெங்களூரு மண்டல ரயில்வே இன்ஸ்பெக்டர் ஜெனரலாக (ஐஜிபி) இருந்த ரூபா ஐபிஎஸ், உள்துறை அமைச்சக செயலராக மாற்றப்பட்டார். இதையடுத்து நேற்று முறைப்படி ரூபா அந்த பொறுப்பை ஏற்றார்.
இவர் 2017-ல் கர்நாடக சிறைத் துறை ஐஜிபியாக இருந்த போது சிறையில் சசிகலா சொகுசாக இருப்பதாக புகார் எழுப்பினார். சிறைத் துறை அதிகாரிகளுக்கு ரூ.2 கோடி லஞ்சம் கொடுத்து சசிகலா வெளியில் சென்று வந்ததாக சிசிடிவி ஆதாரங்களையும் வெளியிட்டார்.
இது தொடர்பான விசாரணை நிலுவையில் உள்ள நிலையில், ரூபா ஐபிஎஸ் உள்துறை செயலராக நியமிக்கப்பட்டிருப்பது திடீர் திருப்பமாக அமைந்துள்ளது.
சொத்துக்குவிப்பு வழக்கில் விதிக்கப்பட்ட தண்டனை காலத்துக்கு முன்பே சசிகலா விடுதலை செய்யப்படுவார் என தகவல் வெளியாகி வரும் நிலையில், ரூபாவின் நியமனம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இவர் பொறுப்பு வகிப்பதால் சசிகலா முன்கூட்டியே விடுதலையாவது, பரோல் பெறுவது உள்ளிட்டவை சிக்கலாக மாறும் என அவரது ஆதரவாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.