

அயோத்தியில் ராமர் கோயில் கட்டப்படுவதற்கான அடிக்கல் நாட்டு விழா மற்றும் பூமி பூஜை விழாவுக்கு பல அரசியல் தலைவர்களும் பல்வேறு கொள்கையுடையவர்க்ளும் வரவேற்பு அளித்துள்ளனர். இது நாட்டின் ஒற்றுமைக்கு வழிவகுக்கும் என்று அரசியல் தலைவர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, “மேரா பாரத் மஹான், மஹான் ஹமாரா இந்துஸ்தான்.. நம் நாடு வேற்றுமையில் ஒற்றுமை என்ற வழிவந்தது, இதனை நாம் உயர்த்திப் பிடித்தே வந்துள்ளோ. இந்தக் கொள்கையை நம் இறுதி மூச்சு வரை காப்பாற்ற வேண்டும்” என்று ட்வீட் செய்துள்ளார்.
டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால், “பகவான் ராமரின் அருள் நமக்கு தொடர்ந்து கிடைக்கட்டும், அவருடைய அருளால் நாடு வறுமையிலிருந்தும் ஏழ்மையிலிருந்தும் விடுபட்டு இந்தியா உலகின் சக்தி வாய்ந்த நாடாக எழுச்சிபெற்று வரும் காலங்களில் உலகிற்கே வழிகாட்டட்டும். ஜெய் ஸ்ரீராம், ஜெய் பஜ்ரங்பலி” என்று தன் இந்தி ட்வீட்டில் பதிவிட்டுள்ளார்.
மத்திய அமைச்சரும் பாஜக தலைவருமான ரவிசங்கர் பிரசாத், “மகா ராமர் கோயில் நாட்டின் கோயிலாகும். இது இந்தியப் பெருமையை, சுயமரியாதையை, நம் ஆன்மீகப் பாரம்பரியத்தைக் கொண்டாடுவதாகும்.” என்றார்.
காங்கிரஸ் தலைமை செய்தித் தொடர்பாளரான ரந்தீப் சுர்ஜேவாலா, “பகவான் ராமர் அருளிய தியாகம், கருணை, பெருந்தன்மை, ஒற்றுமை, சகோதரத்துவம், கடமை ஆகிய லட்சியங்கள் நாட்டை வழிநடத்தும் சக்தியாகும் என்று நாம் நம்புகிறோம்” என்றார்.
ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட், “நம் பண்பாடு மற்றும் நாகரீகத்தில் பகவான் ராமர் தனித்துவமான இடம் பிடித்துள்ளார். அவரது வாழ்க்கை உண்மை, நீதி, சமத்துவம், கருனை மற்றும் சகோதரத்துவம் ஆகியவற்றை நமக்கு கற்றுக் கொடுக்கிறது. பகவான் ராமர் மதிப்பீடுகளின் படி நாம் சமத்துவ சமுதாயம் படைப்பதில் கவனம் செலுத்த வேண்டும்” என்றார்
சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவ், இன்றைய, எதிர்கால சந்ததியினர் ‘மரியாதை புருஷோத்தமர்’ காட்டிய வழியில் நடப்பார்கள், அது நம் அனைவருக்கும் அமைதியை வழங்குவதாகும்’ என்றார்.
மற்றொரு பாஜக தலைவர் சுரேஷ் பிரபு, இது இந்தியாவின் பிரகாசமான தருணம், ‘இந்தத் தருணத்தைப் பார்க்கும் நாம் அனைவரும் அதிர்ஷ்டசாலிகள்’ என்றார்.
காங்கிரஸ் தலைவர் சசி தரூர், “பகவான் ராமர் அனைவருக்கும் நீதி, தார்மீக நெறி, நியாயம் மற்றும் அறரீதியான நடத்தை, அதில் தைரியம் ஆகியவற்றைக் குறிக்கிறார். இவை நாடுமுழுதும் பரவும் போது சகிப்பின்மையின் வெற்றி பெருமிதக் கூச்சல்களுக்கான தருணமாக இருக்காது, ஜெய் ஸ்ரீராம், என்றார்