

அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கான பூமி பூஜை நடக்கும் இந்நேரத்தில் கரசேவகர்களின் தியாகத்தை மறந்தவர்கள், ராம துரோகிகள் என்று சிவசேனா கட்சி விமர்சித்துள்ளது.
உச்ச நீதிமன்றத் தீர்ப்பின் அடிப்படையில் அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்காக மத்திய அரசு ஸ்ரீ ராமஜென்மபூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளையை உருவாக்கியது. அந்த அறக்கட்டளை ராமர் கோயில் கட்டுவதற்கான ஏற்பாடுகளைச் செய்து வருகிறது.
இதன்படி இன்று (ஆகஸ்ட் 5-ம் தேதி) அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கான பூமி பூஜை நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதில் பிரதமர் மோடி ஆர்எஸ்எஸ் அமைப்பின் தலைவர் மோகன் பாகவத், உ.பி. முதல்வர் ஆதித்யநாத், ஆளுநர் ஆனந்திபென் படேல் உள்ளிட்ட 170 பேருக்கு மட்டுமே அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
சிவசேனா கட்சியின் அதிகாரபூர்வ நாளேடான சாம்னா தனது தலையங்கத்தில் கரசேவகர்களை மறந்தவர்கள், ராமர் கோயிலுக்காக உழைத்தவர்கள் உள்ளிட்டோரை நிகழ்ச்சிக்கு அழைக்காததை விமர்சித்துள்ளது.
அந்தத் தலையங்கத்தில் கூறப்பட்டுள்ளதாவது:
''அயோத்தி ராமர் கோயில் பூமி பூஜை என்பது ஒட்டுமொத்த தேசத்துக்கானது, இந்துக்களுக்கானது. ஆனால், பிடிவாதமான விஷயம் என்னவென்றால், இதில் யாருக்கும் எந்தவிதமான பங்கும் அளிக்கவில்லை. இந்த நிகழ்ச்சி என்பது ஆளுமையை மையப்படுத்தியும், அரசியல் கட்சியை மையப்படுத்தியும் இருக்கிறது.
அயோத்தியில் உள்ள மண்ணில் ராமர் கோயில் கோயில் கட்டுமானத்துக்கான அடிக்கல் என்பது, கரசேவகர்களின் தியாகத்தின் வாசத்தால் எழுப்பப்படுகிறது. கரசேகவர்களின் தியாகத்தை மறந்தவர்கள், ராம துரோகிகள்.
அயோத்தியில் ராமர் கோயில் கட்டப்பட வேண்டும் என்று ராம்ஜென்மபூமி-பாபர் மசூதி வழக்கில் வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பை வழங்கிய உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய்க்கு அழைப்பு விடுக்கப்படவில்லை. சட்டத்தின் சிக்கலிலிருந்து ராமரை வெளியே கொண்டுவந்தவர் ரஞ்சன் கோகாய். அவருக்கு அழைப்பு இல்லை.
பாபர் மசூதி இடிப்பு வழக்கில் முக்கியப் பங்காற்றிய சிவசேனா கட்சிக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை. பிரதமர் மோடியின் ஆட்சியில்தான் ராம்ஜென்மபூமி-பாபர் மசூதி வழக்கில் தீர்ப்பு கிடைத்தது என்பது ஏற்றுக்கொள்ளப்படுகிறது. இல்லாவிட்டால், ரஞ்சன் கோகாய் தனது ஓய்வுக்குப் பின், மாநிலங்களவை எம்.பி. ஆக்கப்பட்டிருக்க மாட்டார்.
பாபர் மசூதி செயலாக்கக் குழுவின் இக்பால் அன்சாரி கடந்த 30 ஆண்டுகளாக சட்டப் போராட்டம் நடத்தினார். அவருக்கும் அழைப்பு இல்லை. விஸ்வ இந்து பரிசத், பஜ்ரங் தளம், சிவசேனா, ஆர்எஸ்எஸ் தொண்டர்கள் போலீஸாரின் லத்திக் கம்புகளையும், துப்பாக்கித் தோட்டாக்களையும் எதிர்கொண்டார்கள், பலர் ராமர் கோயில் கட்டப்பட வேண்டும் என்பதற்காக உயிரைத் தியாகம் செய்தார்கள்.
ராமர் கோயில் பூமி பூஜையன்றி ராமர் கோயிலில் இருக்கும் அரசியல் அனைத்தும் முடிவுக்கு வர வேண்டும். காங்கிரஸ், சமாஜ்வாதி, இடதுசாரிகள் அனைவரின் உணர்வுகளுக்கும் மதிப்பளிக்க வேண்டும்.
பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி, ராமர் கோயில் கட்டுமானத்துக்கு முன்னாள் பிரதமர்கள் பி.வி.நரசிம்ம ராவ், ராஜீவ் காந்தி ஆகியோருக்கும் பங்கு உண்டு என்று தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது''.
இவ்வாறு சாம்னாவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.