

அயோத்தியில் இன்று நடைபெறும் ராமர் கோயில் பூமி பூஜை நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி இன்று காலை அயோத்தி நகரம் சென்றார்.
டெல்லியிலிருந்து விமானம் மூலம் புறப்பட்ட பிரதமர் மோடி, லக்னோ சென்றடைந்தார். அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் அயோத்தியில் உள்ள சாகேத் தளத்துக்குச் சென்றடைந்தார். அங்கு பிரதமர் மோடியை, உ.பி. முதல்வர் ஆதித்யநாத் உள்ளிட்ட பலர் வரவேற்றனர். ஏறக்குறைய 29 ஆண்டுகளுக்குப் பின் பிரதமர் மோடி அயோத்தி நகருக்குச் சென்றுள்ளார்.
கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 9-ம் தேதி அயோத்தி வழக்கில் தீர்ப்பளித்த உச்ச நீதிமன்றம், அயோத்தியில் சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலத்தில் ராமர் கோயில் கட்ட அனுமதி வழங்கியும், கோயில் கட்டுவதற்கு அறக்கட்டளையை மத்திய அரசு 3 மாதங்களுக்குள் உருவாக்க வேண்டும் என்றும் தீர்ப்பளித்தது.
உச்ச நீதிமன்றத் தீர்ப்பின் அடிப்படையில் அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்காக மத்திய அரசு ஸ்ரீ ராமஜென்மபூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளையை உருவாக்கியது. அந்த அறக்கட்டளை ராமர் கோயில் கட்டுவதற்கான ஏற்பாடுகளைச் செய்து வருகிறது.
இதன்படி இன்று (ஆகஸ்ட் 5-ம் தேதி) அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கான பூமி பூஜை நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதில் பங்கேற்க பிரதமர் மோடி அயோத்தி நகருக்கு வந்துள்ளார். இந்த நிகழ்ச்சியில் ஆர்எஸ்எஸ் அமைப்பின் தலைவர் மோகன் பாகவத், உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத், ஆளுநர் ஆனந்த்பென் படேல் உள்ளிட்ட 170 பேருக்கு மட்டுமே அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
கரோனா வைரஸ் பரவல் காரணமாக பல்வேறு சுகாதாரக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதால், விஐபிக்கள் வருகை குறைக்கப்பட்டுள்ளது.
அயோத்தி நகருக்குச் சென்றடைந்த பிரதமர் மோடி, அங்குள்ள பழமையான அனுமன் கோயிலுக்குச் சென்று வழிபாடு செய்தார். அவருடன் முதல்வர் ஆதித்யநாத் மட்டும் உடன் சென்றிருந்தார். அங்கிருந்து புறப்பட்டு ஸ்ரீ ராமஜென்மபூமிக்குச் செல்லும் பிரதமர் மோடி, கடவுள் ஸ்ரீ குழந்தை ராமர் கோயிலுக்குச் சென்று வழிபாடு நடத்துகிறார்.
அதன்பின் பூமி பூஜை நிகழ்ச்சி தொடங்குகிறது. பூமி பூஜையின்போது 40 கிலோ எடையுள்ள வெள்ளி செங்கல் பதிக்கப்பட உள்ளது. ராமர் கோயிலுக்கு அடிக்கல் நாட்டும் பிரதமர் மோடி, கடவுள் ராமர் உருவம் பதித்த அஞ்சல் தலையையும் வெளியிட உள்ளார்.
அயோத்தி ராமஜென்ம இயக்கத்தில் முக்கியப் பங்காற்றிய பாஜக மூத்த தலைவர் எல்.கே.அத்வானி, முரளி மனோகர் ஜோஷி ஆகியோரால் நிகழ்ச்சிக்கு வரமுடியாத சூழல் இருப்பதால், அவர்கள் காணொலி மூலம் பூமி பூஜை நிகழ்ச்சியைப் பார்க்க உள்ளனர்.