Last Updated : 05 Aug, 2020 10:42 AM

 

Published : 05 Aug 2020 10:42 AM
Last Updated : 05 Aug 2020 10:42 AM

இந்தியாவில் தயாரிக்கப்பட்ட இரு கரோனா தடுப்பு மருந்துகள் வெற்றிகரமாக 2-ம் கட்ட கிளிக்கல் பரிசோதனைக்குள் நுழைந்தன: ஐசிஎம்ஆர் தகவல்

இந்தியாவில் தயாரிக்கப்பட்ட கரோனா வைரஸுக்கு எதிரான இரு தடுப்பு மருந்துகள் மனிதர்கள் மீதான முதல்கட்ட கிளிக்கல் பரிசோதனையை வெற்றிகரமாக முடித்து, 2-ம் கட்ட கிளிக்கல் பரிசோதனையை தொடங்கிவிட்டன என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கவுன்சில்(ஐசிஎம்ஆர்) இயக்குநர் பல்ராம் பார்கவா தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ஐசிஎம்ஆர் இயக்குநர் பல்ராம் பார்கவா நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:

உலகளவில் 141 நிறுவனங்கள் கரோனா வைரஸுக்கு தடுப்பு மருந்துகளை கண்டுபிடிக்கும் பணியில் இறங்கியுள்ளன. ஒவ்வொரு நிறுவனமும் ஒவ்வொரு கட்டத்தில் உள்ளன. இதில் 26 நிறுவனங்கள் தடுப்பு மருந்தின் முக்கியக் கட்டத்தில் இருக்கின்றன.

கரோனா வைரஸுக்கு எதிராக நமக்கு தடுப்பு மருந்து அவசியம், அவரசரமாகத் தேவைப்படுகிறது. கரோனா வைரஸும் வேகமாக பரவி வருகிறது. கரோனா தடுப்பு மருந்து கண்டுபிடிக்க அறிவியல் ரீதியாக மட்டுமல்லாமல், சமூகச் கலாச்சார மற்றும் ஒழுங்குமுறையிலும் சிறிது காலமாகும்.

இப்போதுள்ள சூழலில் கரோனா வைரஸுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிப்பதில் இந்தியாவில் 3 நிறுவனங்கள் இறங்கியுள்ளன. இதில் இரு உள்நாட்டு நிறுவனங்கள் முதல் கட்ட கிளிக்கல் பரிசோதனையை முடித்துள்ளன.

பல்ராம் பார்க்கவா : படம் ஏஎன்ஐ

அதாவது பாரத் பயோடெக் நிறுவனம், ஜைடெஸ் கெடிலா ஆகிய மருந்து நிறுவனங்கள் கரோனா வைரஸுக்கான தடுப்பு மருந்தை மனிதர்களுக்கு செலுத்தி பரிசோதிக்கும் முதல்கட்ட கிளிக்கல் பரிசோதனையை 11 இடங்களில் முடித்துவிட்டன. 2-வது கட்ட கிளிக்கல் பரிசோதனையை தொடங்கிவிட்டன.

ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்துடன் இணைந்து கரோனா தடுப்பு மருந்தைத் தயாரிக்கும் பணியியில் இறங்கியுள்ள, இந்தியாவின் செரம் மருந்து நிறுவனம் அந்த தடுப்பு மருந்தின் 2வது மற்றும் 3-வது கட்ட கிளிக்கல் பரிசோதனையை மனிதர்கள் மீது செலுத்தி பரிசோதிக்க அனுமதி பெற்றுள்ளது. அந்தப் பரிசோதனை 17 இடங்களில் ஒரு வாரத்தில் நடக்க உள்ளது.

நமக்கு கரோனா தடுப்பு மருந்து கிடைக்கும்வரை, சமூக விலகலைக் கடைபிடித்தல், முக்ககவசம் அணிந்தல், கைகளை கழுவுதல் போன்ற பழக்கங்களை நாம் தொடர வேண்டும்.
இவ்வாறு பார்கவா தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x