ஆக்ஸ்ஃபோர்டு ஆராய்ச்சி மையம் தயாரித்துள்ள கரோனா வைரஸ் நோய் தடுப்பு மருந்தை இந்தியாவில் மனிதர்களிடம் பரிசோதிக்க அனுமதி

ஆக்ஸ்ஃபோர்டு ஆராய்ச்சி மையம் தயாரித்துள்ள கரோனா வைரஸ் நோய் தடுப்பு மருந்தை இந்தியாவில் மனிதர்களிடம் பரிசோதிக்க அனுமதி
Updated on
1 min read

கரோனா வைரஸுக்கு ஆக்ஸ்ஃபோர்டு ஆராய்ச்சி மையம் தயாரித்துள்ள தடுப்பூசியை இந்தியாவில் நோயாளிகளுக்கு வழங்கி பரிசோதனை செய்ய இந்திய மருந்து கட்டுப்பாட்டு ஆணையம் அனுமதி வழங்கியுள்ளது.

கரோனா தொற்று உலகம் முழுவதும் பரவி அச்சுறுத்தி வரும் நிலையில் அதற்கு தடுப்பூசி கண்டுபிடிப்பதில் உலகெங்கும் உள்ள மருத்துவ ஆராய்ச்சியாளர்கள், மருந்து நிறுவனங்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. பலர் தடுப்பூசிகளைத் தயாரித்திருப்பதாகவும் கூறுகின்றனர். தடுப்பூசி கண்டுபிடிப்பதில் ஆக்ஸ்ஃபோர்டு ஆராய்ச்சி மையம் முன்னணியில் உள்ளது. அது உருவாக்கியுள்ள தடுப்பூசி பலகட்ட சோதனைகளில் சாதகமான தீர்வுகளைக் கொடுத்திருக்கின்றன. இந்தத் தடுப்பூசி இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா, பிரேசில் போன்ற நாடுகளில் ஏற்கெனவே பரிசோதிக்கப்பட்டிருக்கிறது.

இந்நிலையில், உலகின் முன்னணி தடுப்பூசி உற்பத்தி நிறுவனமான எஸ்ஐஐ என்ற இந்திய சீரம் தயாரிப்பு நிறுவனம் ஆக்ஸ்ஃபோர்டு ஆராய்ச்சி மையம் உருவாக்கியுள்ள தடுப்பூசியை இந்தியாவில் பரிசோதனை செய்ய விண்ணப்பித்துள்ளது. அந்த விண்ணப்பத்துக்கு இந்திய மருந்து கட்டுப்பாட்டு ஆணையம் அனுமதி அளித்துள்ளது.

எஸ்ஐஐ, இந்த தடுப்பூசியை உற்பத்தி செய்வதற்காக அஸ்ட்ராசென்கா என்ற ஸ்வீடன்-பிரிட்டன் பார்மா நிறுவனத்துடன் கூட்டு சேர்ந்துள்ளது. நடுத்தர மற்றும் குறைந்த வருமானம் ஈட்டும் நாடுகளில் இந்த தடுப்பூசியை சந்தைப்படுத்த திட்டமிட்டுள்ளன. இந்தியாவில் இந்த தடுப்பூசியை பரிசோதனை செய்வதற்கான எஸ்ஐஐயின் விண்ணப்பத்துக்கு இந்திய மருந்து கட்டுப்பாட்டு ஆணையம் (டிசிஜிஐ), மத்திய மருந்து தர கட்டுப்பாட்டு நிறுவனம் ஆகிய இரண்டும் ஒப்புதல் அளித்துள்ளன.

பாரத் பயோடெக் கண்டுபிடித்துள்ள கோவாக்சின், சைடஸ் கெடிலாவின் சைகோவ்-டி ஆகிய தடுப்பூசிகளுக்கு முன்பாகவே இந்தத் தடுப்பூசி இரண்டு மற்றும் மூன்றாம் கட்ட பாதிப்பில் உள்ள நோயாளிகளிடம் பரிசோதிக்கப்பட உள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in