

நம் நாட்டு அரசியலில் பொதுவுடமைக் கொள்கையும் மதச்சார்பின்மையும் பின்னுக்குத் தள்ளப்பட்டு இந்துத்துவா அந்த இடத்தை இன்று பிடித்துள்ளதாக ஆர்.எஸ்.எஸ். மூத்தத் தலைவர் கோவிந்தாச்சார்யா தெரிவித்துள்ளார்.
ராமஜென்ம பூமியில் இன்று பிரதமர் நரேந்திர மோடி பூமி பூஜையை நடத்திக் கொடுத்து ராமர் கோயில் அடிக்கல் நாட்டுகிறார். இதனை கோவிந்தாச்சார்யா தேசிய அரசியல் அதன் வேர்களுக்குத் திரும்பும் தருணம் என்றார். 10 ஆண்டுகளுக்கு முன்பாக விளிம்பில் இருந்த இந்துத்துவா இப்போது மேலும் மேலும் பலம் பெற்று வருகிறது என்றார்.
ஒரு காலத்தில் பாஜகவின் பொதுச் செயலாளராக இருந்த கோவிந்தாச்சார்யா, ரதயாத்திரையின் முக்கிய நபர் ஆவார்.
பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு கோவிந்தாச்சார்யா அளித்த பேட்டியில், “காங்கிரஸ் தலைவர்களான திக்விஜய் சிங், கமல்நாத் ஆகியோர்களே இப்போது ராமர் கோயிலுக்கு ஆதரவாகப் பேசுகின்றனர். வெகுஜன மக்களின் உணர்வுகள் மற்றும் கருத்தியல் முக்கியத்துவத்தை பல எதிர்க்கட்சியினரும் இனி புரிந்து கொள்வார்கள்.
பிரதமர் நரேந்திர மோடி இந்துத்துவாவை தழுவினார், பதிலுக்கு மக்கள் மோடியைத் தழுவினர்.
காங்கிரஸ் தலைவர்களான சோனியா, ராகுல் வீழ்ச்சியடைந்து விட்டனர், வெகுஜன மக்கள் உணர்வுகளை மதிக்காததால் இவர்கள் புறக்கணிக்கப்பட்டு விட்டனர். ஒரு விதத்தில் பாஜகவின் எழுச்சிக்குக் காரணம் எதிர்க்கட்சிகளே.
காங்கிரஸ் கட்சி மகாத்மா காந்தியின் கொள்கைகளுக்கு திரும்ப வேண்டும். இந்துத்துவா உணர்வுகளுக்கு இந்திரா காந்தி பரிவுடன் நடந்து கொண்டார். அதாவது 1977-ல் படுதோல்வி அடைந்த பிறகு மீண்டும் 1980-ல் ஆட்சியைப் பிடித்த போது அவர் போக்கு இவ்வாறாக மாறியது.
நம் நாட்டு அரசியலில் 1952-1980 பிறகு 1980-2010-வரை சோஷலிசமும், மதச்சார்பின்மையும் அரசியலில் ஆட்சி செலுத்தியது. இந்துத்துவா இப்போது அந்த இடத்தைப் பிடித்துள்ளது. நாம் நம் வேரை நோக்கிப் பயணிக்கத் தொடங்கியிருக்கிறோம் என்பதையே இது உணர்த்துகிறது” என்றார் கோவிந்தாச்சார்யா.