அயோத்தியில் இன்று ராமர் கோயில் பூமி பூஜை: பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டுகிறார்

அயோத்தி ராமர் கோயில், வடமாநிலத்தின் நாகரா கட்டுமானக் கலையின் அடிப்படையில் கட்டப்படவுள்ளது. இதன் 3டி மாதிரி படங்களை ராமஜென்ம பூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளை  ட்விட்டரில் நேற்று வெளியிட்டது.படம்: பிடிஐ
அயோத்தி ராமர் கோயில், வடமாநிலத்தின் நாகரா கட்டுமானக் கலையின் அடிப்படையில் கட்டப்படவுள்ளது. இதன் 3டி மாதிரி படங்களை ராமஜென்ம பூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளை ட்விட்டரில் நேற்று வெளியிட்டது.படம்: பிடிஐ
Updated on
2 min read

அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கான பூமி பூஜை விழா இன்று நடைபெறுகிறது. இதில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று அடிக்கல் நாட்டுகிறார்.

அயோத்தியில் ராமர் கோயில் கட்டலாம் என்று கடந்த 2019 நவம்பரில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அதனைத் தொடர்ந்து ராமஜென்ம பூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளை அமைக்கப்பட்டு, பணிகள் தீவிரப்படுத்தப்பட்டன. இதன்படி, கோயில் கட்டுமானத்துக்கான பூமி பூஜை இன்று நடைபெறுகிறது.

இதில் பங்கேற்பதற்காக இன்று காலை 9.35 மணிக்கு டெல்லியில் இருந்து ராணுவ சிறப்பு விமானம் மூலம் புறப்பட்டு லக்னோ வரும் பிரதமர் அங்கிருந்து ஹெலிகாப்டரில் காலை 11.30 மணிக்கு அயோத்தியை அடைகிறார். பின் னர், அயோத்தியில் உள்ள ஹனுமர் கோயிலில் வழிபாடு செய்கிறார். பகல் 12.30 மணிக்கு தொடங்கும் பூஜையில், அடிக்கல் நாட்டுகிறார். பிறகு பாரிஜாத மரத்தை நட்டு, ராமர் பெயரில் சிறப்பு தபால் தலையை வெளியிடுகிறார்.

ராமஜென்ம பூமி பகுதிக்கு வாகனத்தில் ஊர்வலமாக வரும் பிரதமருக்கு உள்ளூர் மக்கள் வரவேற்பு அளிக்கின்றனர். பூமி பூஜைக்கு பிறகு பிரதமர் முக்கிய உரை நிகழ்த்த உள்ளார். ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத், உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் உள்ளிட்டோர் பூஜையில் பங்கேற்கின்றனர்.

பிரதமரின் வருகையையொட்டி அயோத்தி முழுவதும் மத்திய, மாநிலப் படைகள் குவிக்கப்பட்டுள்ளன. எல்லைக்கு சீல் வைக்கப்பட்டு, பூஜை நடைபெறும் பகுதியில் 3,500-க்கும் மேற்பட்ட வீரர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர்.

சிறப்பு அழைப்பாளர்களுக்கான அழைப்பிதழில் ’சிப்’ பொருத்தப்பட்டுள்ளது. இதன்மூலம் அடையாளம் காணப்பட்டு பந்தலுக்குள் அனுமதிக்கப்படுவர். செல்போன் உட்பட அனைத்து எலக்ட்ரானிக் சாதனங்களுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. கரோனா பரவலை தடுக்க விழா பந்தலில் சுமார் 6 அடி இடைவெளியில் இருக்கை வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

முன்னாள் துணை பிரதமர் எல்.கே.அத்வானி, பாஜக மூத்த தலைவர் முரளி மனோகர் ஜோஷி, முன்னாள் ஆளுநர் கல்யாண் சிங் ஆகியோர் காணொலி வாயிலாக பூஜையில் பங்கேற்கின்றனர். விருந்தினர்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ள 135 சாதுக்கள் இந்து மதத்தின் 36 வகை சம் பிரதாயத்தைச் சேர்ந்தவர்கள்.

ராமர் கோயிலின் 3டி படங்கள்

கோயில் கட்டுமானப் பணிகளை கவனிக்கும் குஜராத்தின் சோம்புரா குடும்பத்தைச் சேர்ந்த சந்திரகாந்த் சோம்புரா, அவரது மகன் ஆசிஷ் சோம்புரா கூறும்போது, "வடமாநிலத்தின் நாகரா கட்டுமானக் கலையில் ராமர் கோயில் கட்டப்பட உள்ளது. 3 மாடிகள், 5 குவிமாடங்கள், கோபுரம், 360 தூண்கள், 360 அடி நீளம், 235 அடி அகலம், 161 அடி உயரத்தில் பிரம்மாண்டமாக ராமர் கோயில் கட்டி எழுப்பப்படும். முதல் மாடியில் 160 தூண்கள், 2-வது மாடியில் 132 தூண்கள், 3-வது மாடியில் 72 தூண்கள் அமைக்கப்படும். கருவறை, எண் கோண வடிவில் இருக்கும். வாஸ்து சாஸ்திர வழிகாட்டுதலின்படி கோயில் கட்டப்படும்" என்றனர்.

கோயிலின் புதிய 3டி மாதிரி படங்கள் நேற்று ட்விட்டரில் வெளியிடப்பட்டன. ‘அயோத்தி ராமர் கோயில், இந்திய கட்டிடக் கலையின் தனித்துவமாக விளங்கும்' என்று அந்த பதிவில் அறக்கட்டளை தெரிவித்துள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in