

இந்திய பொருளாதாரத்தை சிறந்த நிலைக்கு வளர்த்தெடுக்க வேண்டியதுதான் மத்திய அரசு அவசரமாக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கையாகும். பொருளாதார தேக்க நிலை, கரோனா ஊரடங்கால் ஏற்பட்ட பாதிப்பு ஆகியன மக்களையும், தொழில்துறையையும் மிகப்பெரும் அச்ச நிலைக்கு தள்ளியுள்ளது. மக்கள் தங்கள் வாழ்வாதாரத்தின் மீது நம்பிக்கை ஏற்படுத்துவதாக பொருளாதார மீட்பு நடவடிக்கைகள் இருக்க வேண்டும்.
அதேபோல தொழில் துறையினர் மீண்டும் தொழில் தொடங்குவதற்கும், முதலீடுகளை மேற்கொள்வதற்கும் உரிய நம்பிக்கையை அளிப்பதாக இருக்க வேண்டும். அதேபோல வங்கியாளர்கள் தொழில் துறையினருக்குத் தேவையான முதலீடுகளை நம்பிக்கையோடு அளிக்க முன்வருவதாக அமைய வேண்டும். பன்னாட்டு அமைப்புகள் மத்தியில் இந்தியாவில் முதலீடு செய்வதற்கு ஏற்ற சூழல் நிலவுகிறது என்ற நம்பகத்தன்மையை ஏற்படுத்த வேண்டும். இந்தியா தனது கடன் பொறுப்புகளை நிச்சயம் நிறைவேற்றும் என தரச்சான்று நிறுவனங்கள் மதிப்பீடு தரும் அளவுக்கு பொருளாதாரத்தை மீட்டெடுக்க வேண்டும்.
ஊரக வேலைவாய்ப்பு
இந்தியாவில் உள்ள ஏழைகள் மிகவும் மோசமான நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். தற்போது வேளாண் சார்ந்த நடவடிக்கைகள் ஊக்கம் பெற்றுள்ளன. 6.20 கோடி மக்கள் தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் (எம்ஜிஎன்ஆர்இஜிஏ) குறைந்தபட்ச ஊதியத்தில் பணி புரிந்துள்ளதாக ஜூன் மாத புள்ளி விவரங்கள் காட்டுகின்றன. வழக்கமாக இத்திட்டத்தில் பணிபுரிபவர்களைக் காட்டிலும் 3 மடங்கு அதிகமானோர் தற்போது பணிபுரிந்துள்ளனர். பட்டியலிடப்பட்ட நிறுவனங்களில் பணி புரிவோரின் எண்ணிக்கையைக் காட்டிலும் இது 10 மடங்கு அதிகமாகும். இதிலிருந்தே புலம் பெயர்ந்த வேளாண் சாரா பணியாளர்கள் தங்களது உணவுத் தேவைக்காக இத்திட்டத்தின்கீழ் பணியாற்றியது புலனாகும். இதன் மூலம் பொருளாதார சூழல் மற்றும் வேலை இழந்தோரின் எண்ணிக்கையை உணர முடியும். இக்கட்டானசூழலில் எம்ஜிஎன்ஆர்இஜிஏ திட்டமானது பலருக்கு வேலை அளிப்பதாக அமைந்துள்ளது என்றாலும் இந்த எண்ணிக்கை போதுமானதல்ல.
புலம்பெயர்ந்த பணியாளர்களின் குடும்பத்தினருக்கு நம்பிக்கையை உருவாக்க, அவர்களுக்கு நிதி உதவி செய்வது அர்த்தமுள்ளதாக இருக்கும். மக்களின் கைகளில் பணம் புரளுவதுதான் அவர்களிடையே பாதுகாப்பான உணர்வையும் நம்பிக்கையையும் ஏற்படுத்தும். இவைதான் பொருளாதாரத்தை வழக்கமான நிலைக்குகொண்டு வர உதவும். மிகப் பெரும் பொருளாதாரத்தைக் கொண்ட ஜனநாயக நாடான இந்தியாவில்தான் கரோனா நெருக்கடி சூழலில் நேரடி பண உதவி செய்யப்படவில்லை. புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு நேரடி நிதியுதவிஅளித்தால் தொழில் துறைக்கு பணியாளர்கள் தேவைப்படும்போது இவர்கள் பணிக்குத் திரும்பமாட்டார்கள் என்ற தவறான அபிப்ராயம் தோன்றியுள்ளது. ஆனால், அத்தகைய நிகழ்வுக்கு எந்த ஒரு சான்றோ, ஆதாரமோ கிடையாது.
அதேசநேரத்தில் அமெரிக்காவில் வேலையிழந்த பணியாளர்களில் மூன்றில் ஒரு பங்கு பேருக்கு அவர்கள் பணியிடங்களில் இருந்து கிடைக்கும் ஊதியத்தைவிட அரசிடம் இருந்து அதிகளவில் நிதி உதவி கிடைத்துள்ளது. இதனால் அமெரிக்க தொழில் நிறுவனங்கள் மீண்டும் தொழில் தொடங்குவதில் எந்த தடையையும் ஏற்படுத்தவில்லை. கரோனா பாதிப்பால் ஏற்பட்டுள்ள சூறாவளியில் இருந்து இவர்களைக் காக்க நேரடி பண பரிவர்த்தனை உதவி செய்வதற்கு இப்போதும் காலம் கடந்துவிடவில்லை என்பதை அரசு உணர வேண்டும்.
நிதி அமைப்புகள்
நமது நிதி அமைப்புகள் மீதான நம்பகத்தன்மையை ஏற்படுத்துவது பொருளாதாரத்தை வளர்க்கும் முக்கிய காரணியாகும். கரோனா ஊரடங்கு காலத்தில் ரிசர்வ் வங்கியும், மத்திய அரசும் இணைந்து வட்டிக் குறைப்பு, கடன் உறுதி,மூலதன நிதி அதிகரிப்பு சலுகை உள்ளிட்ட வரவேற்கத்தக்க நடவடிக்கைகளை எடுத்துள்ளன. ஆனாலும், வங்கிகள் கடன் வழங்குவதில் இன்னமும் தயக்கம் காட்டுகின்றன. வங்கிகளுக்கு மூலதனத்தை அதிகரிக்க முதலீடு செய்வதோ அல்லது பொதுத்துறை வங்கிகளை தனியார் மயமாக்குவதோ தீர்வாகாது. ரிசர்வ் வங்கி, பொதுத்துறை வங்கி, திவால் வாரியங்கள், கடன் சந்தை அமைப்புகள், காப்பீடு கட்டுப்பாட்டு அமைப்புகள் அனைத்தும் சுதந்திரமாக செயல்படவும், தொழில் துறையினரால் நிர்வகிக்கவும் அனுமதிப்பது உள்ளிட்ட நடவடிக்கைகள்தான் நிதித்துறை மீதான நம்பகத்தன்மையை உருவாக்கும்.
திவால் நடவடிக்கைகள் எவ்வித குறுக்கீடுகளும் இன்றி நடைபெற அனுமதிக்க வேண்டும்.மக்கள் அச்சமின்றி செலவழிக்க பணப்புழக்கமும், நிறுவனங்களுக்கு தயக்கமின்றி கடன் வழங்க வங்கிகளும் முன்வரும் போது தனியார்துறையினருக்கும் நம்பிக்கை ஏற்பட்டு உற்பத்தியை அதிகரிக்க முதலீடுகளை மேற்கொள்ளும். தங்களுக்கு தாராளமாக கடன் கிடைக்கும் என நிறுவனங்கள் உறுதியாகநம்புவதும், மக்களிடம் தாராளமாக பணப்புழக்கமும் இருக்கும் நிலையில் முதலீடுகள்பெருகும். கடந்த ஆண்டு அறிவிக்கப்பட்டநிறுவன வரிக்குறைப்பு எந்த வகையிலும்தனியார் முதலீடுகள் அதிகரிக்க உதவவில்லை.உள்நாட்டு தொழில்களைக் காப்பதற்காக மேற்கொள்ளப்படும் வர்த்தகத் தடைகள் ஒருபோதும் இந்திய தொழில் நிறுவனங்களை காப்பாற்றாது. இது ஏற்கெனவே வகுக்கப்பட்டு 30 ஆண்டுகளாக பலனளித்த தொழில் கொள்கையை மாற்றுவது அபாயகரமான விளைவுகளைத் தரும்.
மக்களுக்கு நேரடி நிதியுதவி அளிப்பது, வங்கிகளின் மூலதனத்தை அதிகரிப்பது, நிறுவனங்களின் கடன் உத்தரவாத திட்டம் உள்ளிட்டவற்றை செயல்படுத்த போதுமான அளவுக்கு நிதியை வளப்படுத்த வேண்டும். அரசின்நிதி நிலை பற்றாக்குறையாக உள்ளது. தற்போதைய நிலையில் வரி வசூல் மூலமாக நிதி நிலையை அதிகரிப்பதற்கான சூழல் இல்லை. அதிகளவில் அரசு கடன் வாங்குவது தவிர்க்க முடியாததாகும். தற்போதைய நிலையில் பற்றாக்குறையை கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும் என்பது கட்டாயமில்லை.
சர்வதேச செலாவணி நிதியம் (ஐஎம்எப்), உலக வங்கி உள்ளிட்ட சர்வதேச அமைப்புகள் அளிக்கும் கடன் வசதிகளை இந்தியா முழுமையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும். கடந்தகாலங்களில் இந்தியா கடனை உரிய காலத்தில்திரும்ப செலுத்தியுள்ளது உள்ளிட்ட காரணிகளால் இந்த அமைப்புகள் இந்தியாவுக்கு தாராளமாக கடன் தர முன்வரும். இவை தவிர கூடுதலாகவும் அரசு கடன் வாங்க வேண்டும்.
பற்றாக்குறை நிதி சூழலை சமாளிக்க கடந்தகாலங்களில் ரிசர்வ் வங்கி மேற்கொண்ட நடவடிக்கைகளில் ஒன்று கரன்சி அச்சிடுவதாகும். தற்போது உருவாகியுள்ள எதிர்பாராத சூழலில்இது தவிர்க்க முடியாத ஒன்றுதான். பற்றாக்குறை சூழலில் நிறுவனங்களின் செலவு அதிகரிக்கும், கடந்த காலங்களில் இதை நாம் நன்கு உணர்ந்துள்ளோம். பிற வாய்ப்புகள் அனைத்தும் அடைபட்டுப் போன சூழலில் மட்டுமே நாம் பற்றாக்குறை நிதி நிர்வாகத்தைக் கடைபிடிப்பதை கடைசி வாய்ப்பாக மேற்கொள்ளலாம்.
இந்தியா தற்போது ராணுவ ரீதியாகவும், சுகாதார ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளது. இத்தகைய பிரச்சினைகளில் இருந்து மக்களை திசை திருப்பும் நடவடிக்கைகள், சம்பவங்கள் அனைத்தும் காணாமல் போகும். கரோனா பிரச்சினை மிகவும் மோசமான தாக்கத்தை உருவாக்கி உள்ளது. பொருளாதார தேக்க நிலை,வேலையில்லாத் திண்டாட்டம், நிதி நெருக்கடி உள்ளிட்ட பாதிப்புகளை உருவாக்கி உள்ளது. இந்த கரோனா தொற்று பல்வேறு வகையில் மக்களை மேலும் அவதிக்குள்ளாக்கி உள்ளது என்பதை அரசு உணர வேண்டிய தருணம் இது.
-டாக்டர் மன்மோகன் சிங்
(2004 முதல் 2014 வரை இந்தியாவின் பிரதமர்)
-பிரவீண் சக்ரவர்த்தி
(அரசியல் பொருளாதார நிபுணர், காங்கிரஸ் கட்சியின் மூத்த உறுப்பினர்)
(‘தி இந்து’ ஆங்கில நாளிதழில் வெளிவந்த கட்டுரையின் தமிழாக்கத்தின் சுருக்கம்)