Published : 04 Aug 2020 07:33 PM
Last Updated : 04 Aug 2020 07:33 PM

அசாமிற்கு பிரத்யேக முழுநேர  தூர்தர்ஷன் சேனல் தொடக்கம்

புதுடெல்லி

அசாம் மாநிலத்திற்காக பிரத்யேகமாக முழுநேர தூர்தர்ஷன் சேனல் இன்று தொடங்கப்பட்டது.

மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் அசாம் மாநிலத்திற்கான 24 மணி நேர பிரத்யேக சேனலான தூர்தர்ஷன் அசாம் என்பதை இன்று டெல்லியில் இருந்து காணொலிக் காட்சி மூலம் தொடங்கி வைத்தார்.

அந்தத் தருணத்தில் பேசிய அமைச்சர் ‘‘இந்த அலைவரிசை அசாம் மக்களுக்கான பரிசு. அசாம் மக்கள் தொகையின் அனைத்து பிரிவினர்களுக்கும் இந்த அலைவரிசை சேவையாற்றுவதோடு இது மிகவும் பிரபலமடையும்” என்று தெரிவித்தார்.

அனைத்து மாநிலங்களும் தங்களுக்கென சொந்தமாக தூர்தர்ஷன் அலைவரிசையை வைத்திருப்பது முக்கியமானது என்று அமைச்சர் குறிப்பிட்டார். டிடி இலவச டிஷ்ஷில் இதர மாநிலங்களின் சேனல்கள் கிடைக்கின்றன. தூர்தர்ஷனின் 6 தேசிய அலைவரிசைகளில் ஒலிபரப்பாகும் நிகழ்ச்சிகளை அமைச்சர் பாராட்டினார்.

வடகிழக்குப் பகுதியை இந்தியாவின் வளர்ச்சி மையமாக மாற்ற வேண்டும் என்ற பிரதம மந்திரி நரேந்திர மோடியின் தொலைநோக்குப் பார்வையை வலியுறுத்திப் பேசிய ஜவடேகர் இந்தப் பிராந்தியம் அளப்பரிய இயற்கை மற்றும் மனித மூலவளங்களைக் கொண்டுள்ளது என்றும், இணைப்பு வசதி படிப்படியாக மேம்பட்டு வருகிறது என்றும் தெரிவித்தார். இந்தப் பகுதி குறித்து இதற்கு முன்னர் யாரும் கவனம் செலுத்தாமல் இருந்த நிலையில் தற்போதைய அரசானது வடகிழக்குப் பிராந்தியத்தில் கூடுதல் கவனம் செலுத்துவதன் ஒரு பகுதியாக அசாமில் இந்த தூர்தர்ஷன் அலைவரிசை தொடங்கப்படுகிறது என்று அவர் மேலும் தெரிவித்தார்.

அசாம் முதலமைச்சர் சர்பானந்தா சோனாவால் அசாமில் இருந்தவாறே இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். புதுடெல்லியில் உள்ள தூர்தர்ஷன் கேந்திராவில் தகவல் ஒலிபரப்பு அமைச்சகச் செயலாளர் அமித் கரே கலந்து கொண்டார். கடந்த ஆண்டு பிரதம மந்திரி டிடி அருண் பிரபா அலைவரிசையைத் தொடங்கி வைத்ததில் இருந்து டிடி வடகிழக்கை அசாமுக்கான பிரத்யேக புதிய சேனலாக மாற்றுவது குறித்து விவாதிக்கப்பட்டு வந்தது என்று அமித் கரே குறிப்பிட்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x