

மருத்துவப் படிப்புகளுக்காக தமிழகத்தால் மத்தியத் தொகுப்புக்கு ஒப்படைக்கப்படும் மருத்துவ இடங்களில் 50% இடங்களை இந்த ஆண்டே தமிழக ஓபிசி மாணவர்களுக்கு ஒதுக்க உத்தரவிடக் கோரி தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது.
மருத்துவப் படிப்புகளுக்காக தமிழகத்தால் மத்தியத் தொகுப்புக்கு ஒப்படைக்கப்படும் மருத்துவ இடங்களில் 50% தமிழக ஓபிசி மாணவர்களுக்கு ஒதுக்க உத்தரவிடக் கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு, திமுக, கம்யூனிஸ்ட் கட்சிகள் உள்ளிட்ட கட்சிகள் சார்பிலும், சில மருத்துவர்கள் சார்பிலும் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
அந்த மனுக்களை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வு, மருத்துவப் படிப்பு, மருத்துவ மேற்படிப்புகளில் அகில இந்திய ஒதுக்கீட்டில் ஓபிசி பிரிவினருக்கு எத்தனை சதவிகிதம் இட ஒதுக்கீடு வழங்குவது தொடர்பாக 3 மாதத்தில் மத்திய அரசு முடிவெடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டது. மேலும், அடுத்த கல்வியாண்டில் அமல்படுத்தவும் உத்தரவிட்டது.
இந்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது. தமிழக அரசு தாக்கல் செய்துள்ள மனுவில், மருத்துவப் படிப்புக்காக தமிழகத்தால் அகில இந்தியத் தொகுப்புக்கு ஒதுக்கப்படும் இடங்களில், தமிழக ஓபிசி பிரிவு மாணவர்களுக்கான 50% இட ஒதுக்கீட்டை நடப்புக் கல்வி ஆண்டிலேயே அமல்படுத்த வேண்டும் எனக் கோரிக்கை வைத்துள்ளது.
ஏனெனில் நடப்புக் கல்வியாண்டில் இட ஒதுக்கீட்டை அமல்படுத்தினால் தகுதியுள்ள ஓபிசி மாணவர்களின் மருத்துவக் கனவு பூர்த்தியாகும். எனவே, இந்தக் கல்வியாண்டிலேயே ஓபிசி மாணவர்களுக்கான இட ஒதுக்கீட்டை அமல்படுத்தும் வகையில் உரிய உத்தரவை உச்ச நீதிமன்றம் பிறப்பிக்க வேண்டும் என தமிழக அரசு கோரியுள்ளது.
இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது..
முன்னதாக, சென்னை உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து, மத்திய அரசு மேல்முறையீடு செய்தால், திமுகவை ஒரு தரப்பாக சேர்ப்பதோடு, தங்கள் வாதங்களைக் கேட்காமல் எந்த உத்தரவையும் பிறப்பிக்கக்கூடாது என்பதற்காக அதன் செய்தித் தொடர்பாளர் டி.கே.எஸ்.இளங்கோவன் உச்ச நீதிமன்றத்தில் கேவியட் மனுத் தாக்கல் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.