Last Updated : 04 Aug, 2020 05:25 PM

 

Published : 04 Aug 2020 05:25 PM
Last Updated : 04 Aug 2020 05:25 PM

‘ராம ராஜ்ஜியம்’ அநீதிக்கு எதிரானது- டாக்டர் கஃபீல் கானை விடுவிக்க பிரதமருக்கு எழுதிய கடிதத்தில் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி 

நாடாளுமன்ற காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, தேசியப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட உ.பி. டாக்டர் கஃபீல் கானை விடுவிக்குமாறு பிரதமர் மோடிக்குக் கடிதம் எழுதிக் கேட்டுக் கொண்டுள்ளார்.

வெறுப்பைத் தூண்டும் விதமாகப் பேசியதாக குற்றம்சாட்டப்பட்டு டாக்டர் கஃபீல் கான் தேசியப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறைக்கு அனுப்பப்பட்டார்.

அந்த மருத்துவருக்கு பெரிய அநீதி இழைக்கப்பட்டதாக காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி தெரிவித்துள்ளார்.

சிஏஏ எதிர்ப்புப் போராட்டங்கள் உச்சத்தில் இருந்த போது அலிகார் முஸ்லிம் பல்கலைக் கழகத்தில் வெறுப்பையும் துவேஷத்தையும் தூண்டும் விதமாக பேசியதாக கைது செய்யப்பட்டார் டாக்டர் கஃபீல் கான்.

இந்நிலையில் ராமர் கோயிலின் வரலாற்றுச் சிறப்பு மிக்க அயோத்தி பூமி பூஜையை முன்னிட்டு பிரதமருக்கு கடிதம் எழுதிய ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, ‘ராம ராஜ்ஜியம் அநீதிக்கும், பாகுபாட்டுக்கும், பழிவாங்கலுக்கும் எதிரானது.

நான் என் கட்சியின் சார்பாக நாடாளுமன்றத்திற்கு உள்ளேயும் வெளியேயும் சிஏஏவை எதிர்த்தேன். ஆனால் என் மீதோ போராடிய லட்சக்கணக்கானோர் மீது தேசியப் பாதுகாப்புச் சட்டம் எழுப்பப்படவில்லை.

ஆனாலும் கருத்துச் சுதந்திரம் பேச்சு சுதந்திரம் பொறிக்கப்பட்ட நம் நாட்டு அரசியல் சாசனத்தின் மதிப்புகளுக்கும் மீறி இளம் மருத்துவர் தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டிருப்பது எனக்கு அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.

பன்னாட்டு அமைப்பான ஐநாவும் கூட பிரதமரான உங்களை கபீல் கான் விடுதலை தொடர்பாக கேட்டுக் கொண்டது. பிரதமர் அவர்களே ராம ராஜ்ஜியம் பாகுபாட்டுக்கும், அநீதிக்கும் எதிரானது என்பதை நான் உறுதியாக நம்புகிறேன்.’ என்று கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

2017-ல் உ.பி. அரசு மருத்துவமனையில் ஒரே வாரத்தில் 60 குழந்தைகள் பலியான விவகாரத்தில் குழந்தைகள் மருத்துவ நிபுணரான இவர் கைது செய்யப்பட்டார், ஆனால் 2 ஆண்டுகளுக்குப் பிறகு விசாரணையில் இவர் மீது எந்தத் தவறும் இல்லை என்று விடுவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x