Published : 04 Aug 2020 03:57 PM
Last Updated : 04 Aug 2020 03:57 PM

அனைத்து நீதிமன்றங்களிலும் தேக்கமடையும் வழக்குகள்: வெங்கய்ய நாயுடு கவலை

உச்சநீதிமன்றம் முதல் கீழமை நீதிமன்றங்கள் வரை வழக்குகள் மலை போல் தேங்கி வருவது அதிகரித்துள்ளது குறித்து குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு கவலை தெரிவித்துள்ளார். இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காண அரசும், நீதித்துறையும் விரைந்து நீதி கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

ஆந்திரா பல்கலைக் கழகத்தின் டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் சட்டக் கல்லூரியின் 76 –வது நிறுவன தினத்தையொட்டி நடைபெற்ற பவள விழா மெய்நிகர் நிகழ்ச்சியில் உரையாற்றிய அவர், நீதியை விரைந்தும், குறைந்த செலவிலும் வழங்க வேண்டியது அவசியம் எனக் கூறினார். நீண்ட காலத்துக்கு வழக்குகளை ஒத்தி வைப்பது குறித்து குறிப்பிட்ட அவர், நீதி இப்போது அதிகச் செலவு கொண்டதாக மாறி வருகிறது என்று கூறியதுடன் தாமதிக்கப்பட்ட நீதி மறுக்கப்பட்ட நீதி என்ற புகழ் பெற்ற பொன்மொழியைச் சுட்டிக்காட்டினார்.

பொது நல மனுக்கள் என்பது, சுயநலம், பணத்துடன் சம்பந்தப்பட்ட, அரசியல் நலங்களுக்கான, தனிநபர் நல மனுக்களாக இருக்கக்கூடாது என்று கூறிய குடியரசு துணைத் தலைவர், பெரும்பாலான மக்களின் நலனுக்கானவையாக அவை இருக்கும் பட்சத்தில், தவறில்லை என்று தெரிவித்தார்.

குரலற்றவர்களின் குரலாக சட்ட மாணவர்கள் ஒலிக்க வேண்டும் என்று வலியுறுத்திய அவர், தங்களது சட்ட அறிவை ஒடுக்கப்பட்ட மக்களை அதிகாரம் பெற்றவர்களாக மாற்றப் பயன்படுத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். ஏழை, எளிய மக்களுக்கு சட்ட உதவிகளை அர்ப்பணிப்பு உணர்வுடன் வழங்க வேண்டும் என்று அவர் அறிவுரை வழங்கினார். இளம் வழக்கறிஞர்கள் தங்கள் கடமையைச் செய்யும்போது, அச்சமற்றவர்களாகவும், நியாய உணர்வுடனும் நடந்து கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொண்ட அவர், நெறிமுறைக்கு உட்பட்டு , தொழில் முறையை வளர்த்துக் கொள்ள வேண்டும் என வலியுறுத்தினார்.

அநீதி எங்கு நடந்தாலும், எப்படி இருந்தாலும் அதை எதிர்த்துப் போராட வேண்டும் என்று அவர் கூறினார். சட்டங்களை இயற்றும் போது சந்தேகத்தைத் தவிர்க்க வேண்டும் என்று கூறிய குடியரசு துணைத் தலைவர், சட்டங்கள் எளிமையானதாகவும், சிக்கலின்றியும் இருக்க வேண்டும் எனத் தெரிவித்தார். சொல்லில் மட்டும் கவனம் இருந்தால் போதாது, செயலிலும், நமது சட்டங்களின் நோக்கத்திலும் கவனம் இருக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். ‘’ சட்டத்தின் நோக்கம் தெளிவாக இருக்க வேண்டும்’’, என அவர் அறிவுறுத்தினார்.

வழக்கறிஞர்கள் பெரும் சமூக மாற்றத்தை உருவாக்கும் திறமையுடையவர்கள் என்று கூறிய குடியரசு துணைத் தலைவர், சமுதாயத்தைப் பொறுத்தே, சட்டங்களும் அமையும் என்றார். நீதி, நியாயம், சமத்துவம், கருணை, மனித நேயம் ஆகிய நற்பண்புகளின் அடிப்படையில் நமது சட்டங்களை ஆய்வு செய்து நிலையாக சுயபரிசோதனை செய்து கொள்ள வேண்டும் . அத்துடன், நமது சட்டங்கள், விதிமுறைகள், ஒழுங்கு முறைகளை தொடர்ந்து சீர்திருத்தம் செய்து கொள்ள வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

முன்னேற்றமான சமுதாயத்திற்கு பொருந்தாத சட்டங்களை தாமதமின்றி, பாரபட்சம் பார்க்காமல் ரத்து செய்வதுடன், காலத்திற்கு பொருத்தமான வகையில் சட்டங்களை மாற்ற வேண்டும் என நாயுடு கேட்டுக்கொண்டார்.

நமது நீதிபரிபாலன முறையை முன்னேற்ற அனைத்து மட்டத்திலும் முயற்சி தேவை என வலியுறுத்திய குடியரசு துணைத் தலைவர், சட்ட உள்கட்டமைப்பை தொடர்ந்து மேம்படுத்துவதுடன், மக்களுக்கு, குறிப்பாக சாதாரண மக்களுக்கு நீதியை எளிதில் அணுகுவதற்கு வழி ஏற்படுத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். நமது பெரும்பாலான சட்டங்களும், விதிமுறைகளும் , இன்னும் சாதாரண மனிதனுக்கு தெரியாததாகவே உள்ளன என்று குறிப்பிட்ட அவர், சட்ட அறிவை விரிவுபடுத்த வேண்டும் என வலியுறுத்தினார்.

புதிய கல்வி கொள்கை பற்றி குறிப்பிட்ட அவர், அடிப்படை தொடக்க, உயர் தொடக்கக் கல்வி தாய் மொழியிலேயே இருக்க வேண்டும் என வலியுறுத்தினார். நான் மேலும் ஒரு படி சென்று கூறுகிறேன், நமது அனைத்து நடைமுறைகளிலும் பொது வாழ்க்கையிலும் தாய்மொழியைப் பயன்படுத்துவதுடன், நடைமுறையைப் பிராச்சாரப்படுத்த வேண்டும். கல்வியாக இருந்தாலும், நிர்வாகமாக இருந்தாலும், நீதிபரிபாலனமாக இருந்தாலும், மக்கள் தங்கள் தாய்மொழியில் பேசவும், வாதாடவும், எழுதவும் வேண்டும். அப்போதுதான், அவர்களால் தடையின்றி, சுலபமாக தங்கள் கருத்தைத் தெரிவிக்க முடியும் என்று அவர் கூறினார்.

சட்டத் தொழிலை ஒரு இயக்கமாக இளம் மாணவர்கள் கடைப்பிடிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்ட அவர், மிகவும் அதிகாரமற்ற, ஆதரவற்ற நமது மக்களுக்கு சேவை புரிய எப்போதும் தயாராக இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x