

பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் தற்கொலை தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு நிதிஷ் குமார் தலைமையிலான பிஹார் அரசு பரிந்துரைத்துள்ளது.
இது தொடர்பாக நிதிஷ் குமார் செய்தியாளர்களிடம் கூறும் போது, “சுஷாந்த் குடும்பத்தினர் ஒப்புதல் தெரிவித்ததன் பேரில் அவர் மரணம் தொடர்பாக சிபிஐ விசாரிக்க மாநில அரசு பரிந்துரைக்கிறது, மாநில டிஜிபியிடம் பேசினோம் எனவே சிபிஐ விசாரணைக்கான அனைத்து அடிப்படை சட்ட நடைமுறைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இன்று அதற்கான பரிந்துரையை அனுப்பி விடுவோம்” என்றார்.
இது தொடர்பாக சுஷாந்த் உறவினரும் பாஜக எம்.எல்.ஏ.வுமான நீரஜ் குமார் சிங் பாப்லு தி இந்து ஆங்கிலம் நாளிதழுக்குக் கூறும்போது, “சிபிஐ விசாரணையில் நிச்சயம் உண்மை வெளிவரும். அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் நிதிஷ் குமாருக்கும் நன்றி” என்றார்.
ஜேடியு தலைவர் சஞ்சய் சிங் கூறும்போது, “இப்போது இந்த வழக்கு தொடர்பான அனைத்தும் வெளியே வந்து விடும். பிஹார் போலீஸும் திறமையுடையவர்கள் என்பதில் சந்தேகமில்லை, ஆனால் அனைவரும் சிபிஐ விசாரணை கோருகின்றனர். அரசு சிபிஐ விசாரணைக்கு பரிந்துரைக்கிறது.
ராஷ்ட்ரிய ஜனதாதளத் தலைவர் தேஜஸ்வி யாதவ்வும் சிபிஐ விசாரணை கோரியதை வரவேற்றுள்ளார்.
மும்பையில் பாந்த்ராவில் ஜூன் 14ம் தேதியன்று ராஜ்புத் உடல் தூக்கில் தொங்கிய நிலையில் மீட்கப்பட்டது. ஜூலை 25ம் தேதி சுஷாந்த் சிங்கின் தந்தை கேகே சிங், ரியா சக்ரவர்த்தி மற்றும் 5 பேர் மீது போலீஸ் புகார் அளித்தார்.