

கேரளத்தின் கொல்லம் அருகே உள்ள கடைக்கல் கிராம ஊராட்சியில் கரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்ததால், அந்தப் பகுதியைச் சேர்ந்த இஸ்லாமியர்கள் தங்களுக்குச் சொந்தமான மதரஸா மண்டபத்தை கரோனா நோய் சிகிச்சை மையம் அமைக்க இலவசமாக வழங்கியுள்ளனர். அந்தப் பகுதியில் வசிக்கும் பல்வேறு சமூக மக்களின் பங்களிப்போடு, இப்போது இந்த மையம் அரசின் உயர்தர மருத்துவமனைக்கு இணையாக மிளிர்கிறது.
கடைக்கல் பகுதியில் அரசு தாலுக்கா மருத்துவமனை இயங்கிவருகிறது. இங்கு கரோனா நோயாளிகளுக்கான படுக்கைகள் அனைத்தும் நிரம்பிவிட்ட நிலையில், அரசு அதிகாரிகள் அந்தப் பகுதியில் இருக்கும் பள்ளி, கல்லூரிகளைக் கரோனா சிகிச்சை மையத்துக்காகத் தேடிவந்தனர். அப்போதுதான் கடைக்கல் பகுதியில் காஞ்சிரத்து மூடு முஸ்லிம் ஜமாத்துக்குச் சொந்தமான, விசாலமான மதரஸா ஹால் ஒன்று இருப்பது தெரியவந்தது. இந்த மண்டபம் இஸ்லாமியக் குழந்தைகளுக்கு அரபி மொழி கற்றுத்தரும் பணியைச் செய்து வந்தது. அவ்வப்போது இஸ்லாமியர்களின் விசேஷ நிகழ்வுகளும் இங்கே நடப்பதுண்டு.
இந்த மண்டபத்தை கரோனா சிகிச்சை மையமாக மாற்ற ஜமாத் நிர்வாகிகளை அதிகாரிகள் அணுகிக் கேட்டதுமே அவர்கள் உடனடியாகச் சம்மதித்திருக்கிறார்கள். இதையடுத்து இப்போது ஏ.என்.ஜே மதரஸா ஹால் கரோனா நோயாளிகளுக்குச் சிகிச்சையளிக்கும் மையமாக மாறியுள்ளது. இப்போது இதில் 125 படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
மண்டபம் இலவசமாகக் கிடைத்ததைத் தொடர்ந்து அடுத்தகட்டமாக மருத்துவமனை அமைப்பதற்காக அந்தப் பகுதிவாசிகள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு செலவை ஏற்றுக்கொண்டனர். கடைக்கல் பகுதியைச் சேர்ந்த அப்துல்லா என்பவர் 125 கட்டில்களை இலவசமாக வழங்கியுள்ளார். மார்பிள்ஸ் நிறுவன ஊழியர் ஒருவர் 125 மெத்தைகளை இலவசமாக வழங்கியுள்ளார். இந்தப் பகுதியைச் சேர்ந்த அனைத்து மத நண்பர்களும் சேர்ந்து போர்வை, தலையணை, பக்கெட்கள், வாஷிங் மெஷின் உள்ளிட்டவற்றை வாங்கிக் கொடுத்திருக்கிறார்கள்.
இங்கு சிகிச்சையளிக்க வரும் சுகாதாரப் பணியாளர்கள் தங்குவதற்கு வசதியாக அந்தப் பகுதிவாசிகள் இருவர், தங்களது வீடுகளைத் தற்காலிகமாக வழங்கியுள்ளனர். இந்தக் கரோனா சிகிச்சை மையத்தில் நோயாளிகள் நேரத்தைப் பயனுள்ளதாகச் செலவுசெய்ய வசதியாக நூலக வசதியும் அமைக்கப்பட்டுள்ளது. அதுவும்கூட உள்ளூர்வாசிகளின் பங்களிப்புடனே நடந்திருக்கிறது. இந்த மையத்தில் இன்று முதல் நோயாளிகள் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.
கடைக்கல் ஊராட்சியைச் சேர்ந்த பிஜூ என்பவர் இந்தப் பணிகள் அனைத்தையும் ஒருங்கிணைத்துச் செயல்படுத்தியிருக்கிறார். கரோனா ஒழிப்பிலும், நோயாளிகளின் மீட்பு நடவடிக்கைகளிலும் கடைக்கல் ஊராட்சியின் செயல் பலரது பாராட்டுகளையும் பெற்றுவருகிறது.