அயோத்தி கோயிலின் ராமருக்கு மீசையுடனான சிலைக்கு மகாராஷ்டிரா இந்துத்துவா தலைவர் வலியுறுத்தல்

அயோத்தி கோயிலின் ராமருக்கு மீசையுடனான சிலைக்கு மகாராஷ்டிரா இந்துத்துவா தலைவர் வலியுறுத்தல்
Updated on
1 min read

அயோத்தி கோயிலின் ராமருக்கு மீசையுடனான சிலைக்கு மகாராஷ்டிரா இந்து அமைப்பின் தலைவர் சம்பாஜி பிண்டே வலியுறுத்தி உள்ளார். ராமர் படத்தை வரைந்த ஓவியர் செய்த வரலாற்று பிழை சரிசெய்யப்பட வேண்டும் எனவும் அதில் பிண்டே குறிப்பிட்டுள்ளார்.

மகராஷ்டிராவின் இந்துத்துவா தலைவராக இருப்பவர் சம்பாஜி பிண்டே. தம் துவக்ககால வாழ்க்கையில் ராஷ்டிரிய ஸ்வயம் சேவக் அமைப்பில் (ஆர்எஸ்எஸ்) இருந்தவர் பிறகு கருத்து வேறுபாடுகளால் அதில் இருந்து விலகியவர்.

பிறகு ‘ஸ்ரீசிவ பிரதிஸ்தான் இந்துஸ்தான்’ எனும் புதிய இந்துத்துவா அமைப்பை உருவாக்கி நடத்தி வருகிறார். அவ்வப்போது சம்பாஜி வெளியிடும் கருத்துக்கள் சர்ச்சைகளாகக் கருதப்படுவதால் அவர் தேசிய அளவில் முக்கியத்துவம் பெற்று வருகிறார்.

இதற்கேற்றபடி சம்பாஜியுன் முகத்தில் உள்ள அடர்ந்த முறுக்கிய மீசையும் பார்ப்பவர் கவனத்தை பெற்றுள்ளது. இதுபோன்ற அடர்ந்த மீசை ஆர்எஸ்எஸ் தலைவரான மோஹன் பாக்வத் உள்ளிட்ட பலரும் வைத்திருக்கிறார்கள்.

இந்நிலையில், நாளை அயோத்தியில் பூமி பூஜைக்கு பின் கட்டப்படும் கோயிலின் ராமர் சிலைக்கு மீசை வைக்க வேண்டும் என சம்பாஜி வலியுறுத்தி உள்ளார். மீசை வைக்காத கடவுள்களின் சிலை இல்லாத கோயில்களால் எந்த பலன் இல்லை எனவும் சம்பாஜி கருத்து கூறியுள்ளார்.

இது குறித்து சம்பாஜி பிண்டே கூறும்போது, ‘ஹனுமர், லஷ்மணன் மற்றும் ராமருக்கு மீசை வைக்காதது ஒரு வரலாற்று பிழையாகும். இதில், ராமர் மிகப்பெரிய எடுத்துக்காட்டான ஆண் கடவுளாக இருப்பவர்.

எனவே, ராமருக்கு மீசையுடனான சிலை அமைக்க வேண்டும் என அயோத்தி அறக்கட்டளையினருக்கு கடிதம் எழுதியுள்ளேன்.’ எனத் தெரிவித்துள்ளார்.

இவரது கருத்தை ஏற்க மறுக்கும் அயோத்தி ராமர் கோயிலின் தலைமை பண்டிதர் சத்யேந்தர தாஸ் கூறும்போது, ‘நாடு முழுவதிலும் உள்ள ராமர், சிவன் மற்றும் கிருஷ்ணர் சிலைகளுக்கு மீசைகள் இருக்காது.

ஏனெனில், அந்த சிலைகள் அவர்களது 16 வயதின் உருவங்களை குறிப்பிடுவதாகக் கருதப்படுபவை. சம்பாஜி வெளிப்படுத்தும் கட்டுப்பாடற்ற கருத்து இச்சூழலுக்கு பொருந்தது.’ எனப் பதிலளித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in