

மும்பைவாசிகள் கனமழை கொட்டித்தீர்க்கும் காலையுடன் கண் விழித்தனர். 2 நாட்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டது. மதியம் 12 மணிக்கு மேல் கடலில் உயர் அலைகள் எழும்பும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.
கடந்த 10 மணி நேரத்தில் மும்பையில் 254 மிமீ மழை கொட்டித் தீர்த்துள்ளது.
விடிய விடிய கொட்டித்தீர்த்த மழை மற்றும் தொடர்ந்து பெய்யும் மழையினால் முக்கியச் சாலைகளில் இடுப்பளவு தண்ணீர் நிரம்பியுள்ளது.
பேருந்துகள், கடைகள் நீரில் மூழ்கியுள்ளன. மும்பையின் வாழ்வாதாரமான ரயில்சேவை பாதிக்கப்பட்டுள்ளது. ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதனால் இரு ரயில் நிலையங்களுக்கு இடையே புறநகர் ரயில்கள் எதுவும் தேங்கி நிற்கவில்லை.
அலுவலகங்களுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது, செவ்வாய் மற்றும் புதன் கிழமை இருநாட்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
பிரிஹன் மும்பை கார்ப்பரேஷன் செய்திகளின் படி ஆகஸ்ட் 3ம் தேதி காலை 8 மணி முதல் இன்று காலை 3 மணி வரை மும்பை நகரத்தில் 140.5 மிமீ மழை பெய்துள்ளது. மேற்கு மற்றும் கிழக்கு புறநகர்ப்பகுதிகளில் 84.77 மிமீ மற்றும் 79.27 மிமீ மழை முறையே பதிவாகியுள்ளது.