

கரோனா பரவல் அதிகரிப்பால், அயோத்தியின் ராமர் கோயில் பூமி பூஜை விழாவில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. அழைப்பாளர்கள் 170 என குறைக்கப்பட்டு, மூத்த தலைவர்களான எல்.கே.அத்வானியும், முரளி மனோகர் ஜோஷியும் காணொலிக் காட்சி மூலம் கலந்து கொள்ள ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
அயோத்தியில் ஆகஸ்ட் 5 இல் ராமர் கோயிலுக்கானப் பூமி பூஜை விழாவிற்கான ஏற்பாடுகள் கடைசிக்கட்ட நிலையை எட்டியுள்ளன. பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொள்ளும் இவ்விழாவில் பாதுகாப்பு ஏற்பாடுகளும் அதிகரிக்கப்பட்டுள்ளன.
நாடு முழுவதிலும் திடீர் என அதிகரித்துவிட்டக் கரோனா பரவலின் தாக்கம் ராமர் கோயில் விழாவிலும் ஏற்பட்டுள்ளது. இவ்விழாவை நடத்தும் ஸ்ரீராமஜென்ம பூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளை நிர்வாகிகள் சில மாற்றங்கள் செய்திருப்பது தெரிந்துள்ளது.
துவக்கத்தில் மொத்தம் 280 முக்கிய விருந்தினர்களை அழைப்பது என முடிவு செய்யப்பட்டிருந்தது. இதில் உத்திரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் அளித்த ஆலோசனையின் பேரில் அதன் எண்ணிக்கை 200 என குறைக்கப்பட்டது.
இது மாற்றம் காரணமாக 170 என முக்கிய விருந்தினர்கள் எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளன. ராமர் கோயிலுக்கான ரதயாத்திரை நடத்தி அதன் மீதான விழிப்புணர்வை ஏற்படுத்திய பாஜக மூத்த தலைவர் அத்வானிக்கும்(92), முரளி மனோகர் ஜோஷிக்கும்(86) அழைப்பில்லை எனக் கிளம்பிய சர்ச்சைக்கும் முடிவு ஏற்பட்டுள்ளது.
இதில் அவர்கள் இருவரும் காணொலிக் காட்சி மூலம் பூமி பூஜையில் கலந்து கொள்ள ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதற்கு அவர்கள் இருவருக்கும் மூத்த வயது என்பதே காரணம்.
இது குறித்து இருவரிடமும் அறக்கட்டளையின் நிர்வாகிகள் பேசிவிட்டதாகவும் கூறப்படுகிறது. ராமர் கோயில் போராட்டத்தின் மற்றொரு முக்கிய தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான உமாபாரதிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
எனினும், அவர் விழாவிற்கு ஒருநாள் முன்னதாக அயோத்திக்கு சென்று, சரயு நதியின் அக்கரையில் இருந்து விழாவை காண முடிவு செய்திருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
மாற்றத்திற்கு பின் குறைக்கப்பட்ட 170 இல் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் மற்றும் உபி முதல்வர் யோகி ஆதித்யநாத்துடன் பாஜக தலைவர்களான வினய் கட்டியார், சாத்வீ ரிதாம்பரா, கல்யாண்சிங் ஆகியோர் கலந்துகொள்கின்றனர்.
இதன் தோழமை அமைப்பான விஷ்வ இந்து பரிஷத் மற்றும் பஜ்ரங்தளத்தை சேர்ந்த சிலரும் அழைக்கப்பட்டுள்ளனர். இம்மூன்றின் தாய் அமைப்பான ராஷ்டிரிய ஸ்வயம் சேவக்கின் தலைவர்களான மோஹன் பாக்வத், கிருஷ்ண கோபால் மற்றும் இந்திரேஷ் குமார் ஆகியோரும் இடம் பெற்றுள்ளனர்.
இவர்களுடன் ஸ்ரீராமஜென்ம பூமி அறக்கட்டளையின் கே.பராசரன் உள்ளிட்ட 15 நிர்வாகிகளும் கலந்து கொள்கின்றனர். ராமர் கோயில் பூமி பூஜையானது அரசு விழாவாக அனுசரிக்கப்படவில்லை தவிர அதன் அறக்கட்டளை சார்பானது.
எனினும், இதில் பிரதமர் கலந்துகொள்வதால் வழக்கமானதாக அன்றி, மத்திய, உபி மாநில அரசுகளின் ஒருசில முக்கிய அதிகாரிகள் மட்டுமே கலந்துகொள்கிறார்கள். முன்கூட்டியே திட்டமிட்டபடி இல்லாமல் பிரதமர் அயோத்தியில் இருக்கும் நேரமும் காலை 11.15. முதல் நண்பகல் 1.10 மணி என சுமார் ஒரு மணி நேரம் குறைக்கப்பட்டுள்ளது.