

மிகப்பிரம்மாண்டமாக அமையவுள்ள அயோத்தி ராமர் கோயில் பூமி பூஜைக்கான ஏற்பாடுகள் தடபுடலாக நடைபெற்று வருகின்றன.
பூமிபூஜையை முன்னிட்டு பல்வேறு ஹோமங்கள், யாகங்கள் நேற்று தொடங்கின. கவுரி கணபதி பூஜையுடன் பூமி பூஜை சடங்குகள் தொடங்கின.
இதற்காக லட்சக்கணக்கில் அகல்விளக்குகளை ஏற்ற திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக ஒரு லட்சம் அகல்விளக்குகள் அயோத்திக்கு அனுப்பப்பட்டன. அயோத்தி தவிர மாநிலத்தின் பிற பகுதிகளிலும் விளக்குகள் ஏற்ற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
அயோத்தி பூமி பூஜைக்கான அழைப்பிதழ் காவி நிறத்தின் பின்னணியில் அமைந்துள்ளது. அழைப்பிதழில் பிரதமர் நரேந்திர மோடி, ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாக்வத், யோகி ஆதித்யநாத், உ.பி. ஆளுநர் ஆனந்திபென் படேல் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
வெள்ளி வெற்றிலை:
உத்தரப் பிரதேச மாநிலம் வாரணாசியைச் சேர்ந்த சவுராசியா பிரிவினர் பூமி பூஜைக்காக வெள்ளியினால் ஆன 5 வெற்றிலைகளை தானமாக அளித்துள்ளனர்.
ஹிந்து மத பூஜைகளில் வெற்றிலைகள் இருப்பது மங்களகரமாகக் கருதப்படுகிறது.
இதோடு தங்கத்திலான நாகம், காசி விஸ்வநாதர் கோயிலில் இருந்து சந்தனம், வெள்ளியிலான ஆமை ஆகியவையும் பூமி பூஜைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளது.
ராமருக்கு நவரத்ன ஆடை:
அயோத்தியைச் சேர்ந்த சங்கர்லால், பகவான்லால் சகோதரர்கள் ராமருக்கு உடை தைத்து வருகின்றனர். இவர் தந்தை பாபுலால் 1985லிருந்தே ராமருக்கு உடை தைத்து வந்தவர்.
தற்போது பூமி பூஜையை முன்னிட்டு குழந்தை ராமர் விக்கிரகத்துக்கு பச்சை மற்றும் ஆரஞ்சு நிறங்களில் இரண்டு உடைகள் தைக்கப்பட்டுள்ளன. இவற்றில் தங்க நூலால் நவரத்னங்கள் பதிக்கப்பட்டுள்ளன.
ராமருக்குக் கற்கோயில்:
ராமருக்கான கோயிலில் இரும்புக் கம்பிகள், மரம், தாமிரம், வெள்ளை சிமெண்ட் ஆகியவை பயன்படுத்தப் படாது.
பல நூற்றாண்டுகளுக்கு நிற்க வேண்டும் என்பதால் முழுக்க முழுக்க கற்களால் ஆன கோயிலாக இது அமையும். இதற்குத் தேவைப்படும் கற்கள் ஏற்கெனவே அயோத்தியில் உள்ளன.
கூடுதலாகத் தேவைப்படும் கற்கள் ராஜஸ்தானிலிருந்து வரவழைக்கப்படவுள்ளன.
நன்கொடையாக வந்த தங்கம், வெள்ளி, தாமிரம் ஆகியவை கோவிலுக்கான அஸ்திவாரத்தில் பயன்படுத்தப்படவுள்ளன.