

அயோத்தியில் மசூதி கட்டுவதற்காக அரசு ஒதுக்கிய 5 ஏக்கர் நிலம் சன்னி வக்ஃபு வாரி யத்திடம் முறைப்படி ஒப்படைக்கப்பட்டது.
உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் சர்ச்சைக்குரியதாக இருந்து வந்த நிலம் இந்துக்களுக்கு சொந்தம் என்றும் அந்த நிலத்தில் ராமர் கோயில் கட்டிக் கொள்ள லாம் என்றும் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அதேநேரம், முஸ்லிம்கள் மசூதி கட்டிக் கொள்வதற்காக அயோத்தி யில் 5 ஏக்கர் நிலத்தை மாநில அரசு வழங்க வேண்டும் என்றும் உத்தரவிட்டது. அதன்படி, அயோத்தியில் பிரம்மாண்ட ராமர் கோயில் கட்டப்பட உள்ளது. அதற் கான பூமி பூஜை நாளை நடக்க உள்ளது. இதில் பிரதமர் மோடி கலந்துகொள்கிறார்.
இந்நிலையில், உச்ச நீதிமன்ற உத்தர வுப் படி மசூதி கட்டுவதற்காக சன்னி வக்ஃபு வாரியத்திடம் 5 ஏக்கர் நிலம் முறைப்படி ஒப்படைக்கப்பட்டது. மாவட்ட ஆட்சியர் அனுஜ் குமாரை வாரியத்தின் தலைவர் ஜூபர் பரூக்கி தலைமையில் உறுப்பினர்கள் கடந்த சனிக்கிழமை சந்தித்தனர். அப் போது, அவர்களிடம் பைசாபாத்தின் தன்னிபூர் கிராமத்தில் அரசு ஒதுக்கிய 5 ஏக்கர் நிலத்துக்கான ஆவணங்களை அனுஜ் குமார் ஒப்படைத்தார்.
இதுகுறித்து சன்னி வக்ஃபு வாரி யத்தின் தலைமை செயல் அதிகாரி சையது முகமது சோஹிப் கூறும்போது, ‘‘மசூதி கட்டுவதற்காக அரசு ஒதுக்கிய 5 ஏக்கர் நிலத்தையும் அதன் உரிமைக்கான ஆவணங்களையும் ஆட்சியர் எங்களிடம்முறைப்படி ஒப்படைத்தார்’’ என்றார். அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து வாரியத் தின் உறுப்பினர்கள் விரைவில் கூடி முடிவு செய்வார்கள் என்றும் அவர் கூறினார்.
அயோத்தியில் மசூதி கட்டுவதற்காக தன்னிபூர் கிராமத்தில் அரசு ஒதுக்கிய நிலம், ராமர் கோயில் அமைய உள்ள ராமஜென்ம பூமி இடத்தில் இருந்து 25 கி.மீ. தொலைவில் உள்ளது குறிப் பிடத்தக்கது.