ராமர் கோயில் பூமி பூஜை விழா: பாபர் மசூதி தரப்பு வழக்கின் முக்கிய மனுதாரர் அன்சாரிக்கு முதல் அழைப்பு 

ராமர் கோயில் பூமி பூஜை விழா: பாபர் மசூதி தரப்பு வழக்கின் முக்கிய மனுதாரர் அன்சாரிக்கு முதல் அழைப்பு 
Updated on
2 min read

ராமர் கோயிலின் பூமி பூஜை விழாவிற்கான முதல் அழைப்பு பாபர் மசூதி தரப்பு வழக்கின் முக்கிய மனுதாரர் இக்பால் அன்சாரிக்கு அளிக்கப்பட்டுள்ளது. இதை ஏற்று அவர் தவறாமல் கலந்துகொள்வதாக அறிவித்துள்ளார்.

அயோத்தியில் ராமர் பிறந்த இடத்தில் இருந்த கோயில் இடிக்கப்பட்டு அங்கு பாபர் மசூதி கட்டப்பட்டதாகப் புகார் எழுந்தது. பல ஆண்டுகளாக நிலவிய இந்த புகாரின் மீது நீதிமன்ற வழக்கும் சுமார் 70 வருடங்கள் நடைபெற்றன.

கடைசியாக உச்ச நீதிமன்றம் அடைந்த அதன் மேல்முறையீட்டு வழக்கில் சர்ச்சைக்குரிய நிலைம் இந்துக்கள் தரப்பிற்கு சொந்தம் என தீர்ப்பளிக்கப்பட்டது. கடந்த வருடம் நவம்பரில் வெளியான இத்தீர்ப்பில் முக்கிய மனுதாரராக இருந்தவர் அயோத்திவாசியும், பாபம் மசூதியின் கடைசி முத்தவல்லியுமான ஹாசீம் அன்சாரி,

இடையில் ஏற்பட்ட ஹாசீமின் மறைவால் அவரது மகனான இக்பால் அன்சாரி வழக்கை தொடர்ந்து நடத்தி வந்தார். இவர் உச்ச நீதிமன்ற தீர்ப்பையும் மனமார ஏற்பதாகக் கூறி இருந்தார்.

இந்நிலையில், ஆகஸ்ட் 5 இல் நடைபெறும் ராமர் கோயிலின் பூமி பூஜை விழாவிற்கு முதல் அழைப்பிதழ் இக்பால் அன்சாரிக்கு இன்று அளிக்கப்பட்டுள்ளது. இதை அவர் தனது வீட்டில் மகிழ்வுடன் பெற்றுக் கொண்டார்.

இதுகுறித்து ‘இந்து தமிழ் திசை’ இணையத்திடம் இக்பால் அன்சாரி கூறும்போது, ‘புனித நகரான அயோத்தியில் இந்து-முஸ்லிம்களுக்கு இடையே வேறுபாடுகள் கிடையாது. இங்குள்ள கோயில்களுக்கு நாம் சிறுவயது முதல் சென்று வந்து கொண்டிருக்கிறோம்.

இங்குள்ள மடங்களையும் அதன் சாதுக்களையும் மிகவும் மதிக்கிறோம். இந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் இறுதி தீர்ப்பளித்து விட்டபின் அதில் எந்த பிரச்சனையும் இல்லை. எனவே, நான் ராமர் கோயில் விழாவிற்கான அழைப்பை ஏற்று மகிழ்வுடன் கலந்து கொள்வேன்.

இதற்காக வரும் பிரதமர் நரேந்திர மோடிக்கு எனது சார்பில் இந்துக்களின் புனித நூலான ஸ்ரீராமச்சந்திர மானஸ் பரிசாக அளிக்க உள்ளேன். இக்கோயில் அமைவதால் அயோத்தியில் அனைத்து தரப்பினருக்கும் வேலைவாய்ப்பும் பெருகும் என நம்புகிறேன்’ எனத் தெரிவித்தார்.

தங்கநிறத்தாலான இந்த அழைப்பிதழ் ஸ்ரீராமஜென்ம பூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளையின் சார்பில் இன்றுமுதல் விநியோகிக்கத் துவக்கப்பட்டுள்ளது. இதை அறக்கட்டளையின் தலைவர் நிருத்தியகோபால் தாஸ் அனுப்பி வருகிறார்.

இதில் விழாவின் சிறப்பு அழைப்பாளராக பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ராஷ்டிரிய ஸ்வயம் சேவக் சங்கின் தலைவர் மோஹன் பாக்வத் பெயர்கள் உள்ளன. உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் மற்றும் ஆளுநர் அனந்த்பென் பட்டேல் ஆகியோர் பெயர்களும் இடம் பெற்றுள்ளன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in