

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கரோனா தொற்றுக்கு டெல்லி எய்ஸ்ம் மருத்துவமனையில் சிகிச்சை எடுக்காமல் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை எடுப்பது வியப்பாக இருக்கிறது என்று காங்கிரஸ் எம்.பி. சசி தரூர் கேள்வி எழுப்பியுள்ளார்.
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு நேற்று கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து, அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார். ஹரியாணா மாநிலம் குருகிராமில் உள்ள மேதாந்தா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
உ.பி. மாநில பாஜக தலைவர் ஸ்வதந்திரநாத் சிங், கர்நாடக மாநில முதல்வர் எடியூரப்பா உள்ளிட்டோரும் கரோனாவில் பாதிக்கப்பட்டு சிகி்ச்சையில் உள்ளனர்.
அமித் ஷா ட்விட்டரில் பதிவிட்ட செய்தியில் “ உடல்நிலை சீராகவும், நலமுடன் இருக்கிறேன். மருத்துவர்கள் ஆலோசனைப்படி மருத்துவமனையில் சேர்ந்துள்ளேன். என்னுடைய கடந்த 10 நாட்களாக நெருங்கிய தொடர்பில் இருந்தவர்கள் தங்களைத் தனிமைப்படுத்திக்கொண்டு பரிசோதனை செய்யும்படி கேட்டுக்கொள்கிறேன்” எனத் தெரிவிவித்தார்.
இந்நிலையில் காங்கிரஸ் எம்.பி. சசி தரூர், தனது ட்விட்டர் பக்கத்தில், அமித் ஷா ஏன் அரசின் எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேரவில்லை என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
அவர் பதிவிட்ட கருத்தில் “ உண்மை, ஏன் நம்முடைய உள்துறை அமைச்சர் கரோனாவில் பாதிக்கப்பட்டபோது, எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெறாமல், அண்டை மாநிலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறார் என்பது வியப்பாக இருக்கிறது. மக்களிடம் நம்பிக்கையை ஏற்படுத்த நினைத்தால், எய்ம்ஸ் போன்ற பொது நிறுவனங்களுக்கு அரசின் உயர்ந்த பதவிகளில் இருப்போர் ஆதரவு அளிப்பது அவசியம்” எனத் தெரிவித்துள்ளார்.