

கர்நாடக முதல்வர் எடியூரப்பா கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், அவரின் மகளுக்கும் நோய்த்தொற்று ஏற்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
எடியூரப்பா அனுமதிக்கப்பட்டுள்ள அதே மருத்துவமனையில் அவரின் மகளும் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
எடியூரப்பாவுக்கு எடுக்கப்பட்ட கரோனா பரிசோதனையில் அவருக்குத் தொற்று இருப்பது நேற்று இரவு உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, மருத்துவர்கள் ஆலோசனையின்படி, பெங்களூருவில் உள்ள பழைய விமான நிலையம் அருகே இருக்கும் மணிபால் மருத்துவமனையில் எடியூரப்பா சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் எடியூரப்பாவின் மகளுக்கும் கரோனா பரிசோதனை நடத்தப்பட்டதில் அவருக்கும் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, அவர் எடியூரப்பா சிகிச்சை பெறும் மருத்துவமனையிலேயே அனுமதிக்கப்பட்டுள்ளார் என்று மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
எடியூரப்பாவின் மகன் பி.ஒய்.விஜயேந்திரா 7 நாட்கள் வீட்டில் தனிமைப்படுத்திக் கொள்ளப்போவதாக அறிவித்துள்ளார். இதுகுறித்து விஜயேந்திரா ட்விட்டரில் பதிவிட்ட கருத்தில், “என் தந்தையின் உடல்நிலை குறித்துக் கேட்டு நலம் விசாரித்த அனைவருக்கும் நன்றி. எனது தந்தை உடல்நிலை சிறப்பாக இருக்கிறது, மருத்துவர்கள் கண்காணிப்பில் இருப்பதால், யாரும் கவலைப்படத் தேவையில்லை.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, நானும் 7 நாட்கள் வீட்டில் தனிமைப்படுத்திக் கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.
பாஜக மாநிலத் துணைத் தலைவராக விஜயேந்திரா கடந்த வெள்ளிக்கிழமைதான் நியமிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையே கர்நாடக மருத்துவக் கல்வி அமைச்சர் கே.சுதாகர் இன்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறுகையில், “முதல்வர் எடியூரப்பாவைச் சந்தித்துப் பேசிய அனைவரும் தங்களைத் தனிமைப்படுத்திக் கொண்டு பரிசோதனை செய்யக் கேட்டுக்கொள்கிறேன். எடியூரப்பாவுக்கு லேசான இருமல் இருக்கிறது, அவரின் நுரையீரல், மார்புப் பகுதி தெளிவாக இருக்கிறது. இன்னும் அதிகபட்சமாக 8 முதல் 10 நாட்கள் வரை மருத்துவமனையில் எடியூரப்பா தங்கியிருப்பார்.
கடந்த 4 நாட்களாக எடியூரப்பாவைச் சந்தித்தவர்களின் பட்டியல் எடுக்கப்பட்டு அவர்களைத் தனிமைப்படுத்திக் கொள்ள அரசு சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டு வருகிறது. அவர்கள் கரோனா பரிசோதனை செய்துகொண்டு, முடிவுகள் வரும்வரை தனிமையில் இருக்க வேண்டும்.
முதல்வர் எடியூரப்பாவுடன் ஆளுநர் வாஜூபாய் பாலா, உள்துறை அமைச்சர் பசவராஜ் ஆகியோர் கடந்த வெள்ளிக்கிழமை சந்தித்துப் பேசினார்கள். அவர்களும் தனிமைப்படுத்திக் கொண்டு, பரிசோதனை செய்ய வேண்டும்’’ எனத் தெரிவித்தார்.