

அயோத்தியில் வரும் 5-ம் தேதி நடக்கும் ராமர் கோயில் பூமி பூஜையில் பங்கேற்கமாட்டேன். ஆனால், அயோத்திக்குச் செல்வேன் என்று பாஜக மூத்த தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான உமா பாரதி தெரிவித்துள்ளார்.
கரோனா அச்சம் காரணமாக, பிரதமர் மோடி உள்பட விருந்தினர்களுக்கு ஏதும் தொற்று ஏற்பட்டுவிடக்கூடாது என்பதற்காக விலகி இருப்பதாக உமா பாரதி தெரிவித்துள்ளார்.
அயோத்தியில் ராமர் கோயில் பூமி பூஜை வரும் 5-ம் தேதி நடைபெற உள்ளது. கரோனா வைரஸ் அச்சுறுத்தல் இருப்பதால், நிகழ்ச்சிக்கு 200 முக்கிய விஐபிக்களு்கு மட்டுமே அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதில் பிரதமர் மோடி, உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத், ஆளுநர் ஆனந்திபென் படேல், ஆர்எஸ்எஸ் அமைப்பின் தலைவர் மோகன் பாகவத் உள்ளிட்ட முக்கியமானவர்கள் மட்டுமே பங்கேற்கின்றனர்.
இந்த பூமி பூஜை நிகழ்ச்சியில் பங்கேற்க பாஜக மூத்த தலைவரும், ராமர் கோயில் இயக்கத்தில் தீவிரமாகச் செயல்பட்டவருமான உமா பாரதிக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. ஆனால், கரோனா வைரஸ் அச்சம் காரணமாக அந்த நிகழ்ச்சியில் பங்கேற்கப் போவதில்லை என உமா பாரதி தெரிவித்துள்ளார்.
உமா பாரதி தனது ட்விட்டர் பக்கத்தில் தனது பயணம் குறித்து பல்வேறு கருத்துகளைத் தெரிவித்துள்ளார்.
அதில் அவர் கூறுகையில், “உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்பட பல பாஜக தலைவர்கள் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பதை அறிந்தேன்.
அயோத்தி பூமி பூஜை நிகழ்ச்சியில் பங்கேற்பவர்களை நினைத்தால் கவலையாக இருக்கிறது. குறிப்பாக பிரதமர் மோடியை நினைத்தால் கவலையாக இருக்கிறது.
திங்கள்கிழமை போபால் நகரிலிருந்து ரயில் மூலம் அயோத்தி நகருக்கு நாளை இரவுக்குள் சென்றுவிடுவேன். ஆனால், ரயில் பயணத்தின்போது கரோனாவில் பாதிக்கப்பட்ட பலரையும் எதிர்கொள்ள நேரிடலாம்.
இதன் காரணமாக பூமி பூஜையில் பிரதமர் மோடி உள்ளிட்ட நூற்றுக்கணக்கானோர் நலன் கருதி நான் நிகழ்ச்சியில் பங்கேற்கவில்லை. நான் சரயு நதியின் மறுகரையில் நின்று பூமி பூஜையைக் காண்பேன். பிரதமர் மோடி உள்பட அனைவரும் வந்து சென்றபின் நான் ராமர் கோயிலுக்குச் செல்வேன்.
அயோத்தி ராம ஜென்ம பூமி நியாஸ் அதிகாரிகள், பிரதமர் அலுவலகம், சிறப்புப் பாதுகாவலர்கள் அனைவருக்கும் நான் நிகழ்ச்சியில் பங்கேற்கவில்லை எனும் தகவலைத் தெரிவித்துவிட்டேன்” என்று உமா பாரதி தெரிவித்துள்ளார்.