ராமர் கோயில் பூமி பூஜையை தள்ளி வைக்க வேண்டும்: திக் விஜய் சிங் வலியுறுத்தல்

ராமர் கோயில் பூமி பூஜையை தள்ளி வைக்க வேண்டும்: திக் விஜய் சிங் வலியுறுத்தல்
Updated on
1 min read

ராமர் கோயில் பூமி பூஜை நடத்தி எத்தனை பேருக்கு கரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைப்பீர்கள் என பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் மூத்த தலைவர் திக் விஜய் சிங் கேள்வி எழுப்பியுள்ளார்.

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 9-ம் தேதி அயோத்தி வழக்கில் தீர்ப்பளித்த உச்ச நீதிமன்றம், அயோத்தியில் சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலத்தில் ராமர் கோயில் கட்ட அனுமதி வழங்கியும், கோயில் கட்டுவதற்கு அறக்கட்டளையை மத்திய அரசு 3 மாதங்களுக்குள் உருவாக்க வேண்டும் என்றும் தீர்ப்பளித்தது.

அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்காக மத்திய அரசு ஸ்ரீ ராமஜென்மபூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளையை உருவாக்கியது. அந்த அறக்கட்டளை மூலம் ராமர் கோயில் கட்டுவதற்கான ஏற்பாடுகளைச் செய்து வருகிறது.

ஆகஸ்ட் 3-ம் தேதி முதல் 5-ம் தேதிவரை அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கான பூமி பூஜை நிகழ்ச்சிகள் நடக்கின்றன.

ஆகஸ்ட் 5ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி ராமர் கோயில் அடிக்கல் நாட்டவிருக்கிறார்.
பல மாநில முதல்வர்கள், மத்திய அமைச்சர்கள், ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத், ஆகியோர் நிகழ்ச்சியில் பங்கு பெறுவர் என்று தெரிகிறது.

இந்தநிலையில் காங்கிரஸ் மூத்த தலைவர் திக் விஜய் சிங் கூறியதாவது:

அயோத்தியில் ராமர் கோயில் கட்டுமானப் பணிக்கான பூமி பூஜை தொடக்க விழாவை தள்ளி வைக்க வேண்டும் என பலரும் கோரியுள்ளனர். அது நல்ல நேரம் அல்ல என்பதையும் பலரும் சுட்டிக்காட்டியுள்ளனர். அதுமட்டுமின்றி அயோத்தியில் கோயில் தொடர்புடைய பலருக்கும் கரோனா வைரஸ் தொற்று பரவியுள்ளது. எனவே விழாவை நிறுத்த வேண்டும். உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத்தும் இதுதொடர்பாக பிரதமர் மோடியை தொடர்பு கொண்டு வலியுறுத்த வேண்டும்.

பிரதமர் மோடிக்கு பொருத்தமான நாள் என்பதால் இதனை தேர்வு செய்துள்ளனர். அந்த நாள் பூமி பூஜை செய்வதற்கு உகந்த நாள் இல்லை என மடாதிபதிகள் கூட தெரிவித்து விட்டனர். ராமர் கோயில் பூமி பூஜை நடத்தி எத்தனை பேருக்கு கரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைப்பீர்கள். சனாதன தர்மத்தை மீறி நீங்கள் எப்படி செயல்படுகிறீர்கள். அப்படி என்ன நிர்பந்தம் உங்களுக்கு’’ என திக் விஜய் சிங் குறிப்பிட்டுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in