Last Updated : 03 Aug, 2020 12:02 PM

 

Published : 03 Aug 2020 12:02 PM
Last Updated : 03 Aug 2020 12:02 PM

சீனப் பொருட்களைப் புறக்கணிக்கும் கோஷம்; ஐபிஎல் போட்டிக்கு சீன செல்போன் நிறுவனம் ஸ்பான்ஸர்: உமர் அப்துல்லா வியப்பு

தேசிய மாநாட்டுக் கட்சியின் தலைவர் உமர் அப்துல்லா: கோப்புப் படம்.

ஸ்ரீநகர்

கிழக்கு லடாக் எல்லையில் இந்திய ராணுவத்தினருடன் ஏற்பட்ட மோதலால் சீனப் பொருட்களை மக்கள் புறக்கணித்து வரும்போது, ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் சீன செல்போன் நிறுவனம் ஸ்பான்ஸர் செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளது என்று தேசிய மாநாட்டுக் கட்சியின் தலைவரும் காஷ்மீர் முன்னாள் முதல்வருமான உமர் அப்துல்லா தெரிவித்துள்ளார்.

செப்டம்பர் 19-ம் தேதி முதல் நவம்பர் 10-ம் தேதி வரை ஐக்கிய அரபு அமீரக்தில் 13-வது ஐபிஎல் டி20 கிரிக்கெட் போட்டித் தொடர் நடத்தப்பட உள்ளது.

இந்தக் கிரிக்கெட் தொடரில் சீனாவின் விவோ செல்போன் நிறுவனம்தான் பிரதானமான ஸ்பான்ஸராகச் சேர்க்கப்பட்டுள்ளது. இந்த நிறுவனத்துடன் பிசிசிஐ ஆண்டுக்கு ரூ.450 கோடி மதிப்பில் 5 ஆண்டுகள் ஸ்பான்ஸர் ஒப்பந்தம் செய்துள்ளது. இந்த ஒப்பந்தம் வரும் 2022-ம் ஆண்டுடன் முடிகிறது.

கிழக்கு லடாக் எல்லையில் இந்திய-சீன ராணுவத்துக்கு இடையே ஜூன் 15-ம் தேதி ஏற்பட்ட மோதலில் இந்திய வீரர்கள் 20 பேர் உயிரிழந்தனர். இந்த மோதலுக்குப் பின் இந்தியாவில் சீனாவுக்கு எதிரான மனநிலை காணப்படுகிறது.

சீனச் செயலிகளுக்கு மத்திய அரசு தடை விதித்தது. பல்வேறு துறைகளில் இருந்து சீன நிறுவன ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டது என சீன எதிர்ப்பு மேலோங்கி வருகிறது. மக்களும் சீனப் பொருட்களைப் புறக்கணிக்க வேண்டும் என்று சமூக வலைதளங்களில் முழக்கமிட்டும் பதிவிட்டும் வருகின்றனர்.

ஒருபுறம் சீனப் பொருட்களுக்கு எதிர்ப்பும், மறுபுறம் ஐபிஎல் போட்டிக்கு சீன நிறுவனத்தின் ஸ்பான்ஸரும் இருப்பது வியப்பாக இருக்கிறது என உமர் அப்துல்லா தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து தேசிய மாநாட்டுக் கட்சியின் தலைவர் உமர் அப்துல்லா தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்ட கருத்தில், “மக்கள் சீனப் பொருட்களைப் புறக்கணித்து வரும்போது, ஐபிஎல் போட்டித் தொடருக்கு சீன நிறுவனம் ஸ்பான்ஸர் செய்கிறது.

சீனா நமக்குச் சவால் விடுவதில் வியப்பு ஏதும் இல்லை. ஏனென்றால் சீனாவின் விளம்பரம், முதலீடு, ஸ்பான்ஸர்ஷிப், பணம் ஆகியவற்றை எவ்வாறு கையாள்வது என்பதில் நாம் மிகவும் குழம்பி இருக்கிறோம்.

பிசிசிஐ, ஐபிஎல் நிர்வாகக் கவுன்சில் கூட்டத்தில் சீன நிறுவனத்தின் ஸ்பான்ஸர் உள்பட்ட அனைவரும் தொடர்வார்கள் என முடிவெடுக்கப்பட்டுள்ளது.

இதைக் காணத்தான் சீனாவில் தயாரிக்கப்பட்ட தொலைக்காட்சியைத் தங்கள் வீட்டு முற்றத்திலிருந்து முட்டாள்கள் தூக்கி எறிந்து உடைத்தார்கள். அவர்களை நினைத்து வருத்தப்படுகிறேன்.

சீன நிறுவனங்களின் விளம்பரம், ஸ்பான்ஸர்ஷிப் இல்லாமல் நம்மால் சமாளிக்க முடியாது என்று எப்போதுமே நம்மை நாமே சந்தேகப்படுகிறோம்.

திடீரென நகரும் தன்மை, நகர்வின் எதிர்பாராத தன்மை, நகர்வின் கணிக்க முடியாத தன்மை. அவர்களைத் தாக்கியது என்ன என்று அவர்களுக்குத் தெரியாது. சீன நிறுவனங்களின் ஸ்பான்ஸர்ஷிப் மற்றும் விளம்பரம் இல்லாமல் நம்மால் சமாளிக்க முடியாது என்று நாம் எப்போதும் நம்மை சந்தேகிக்கிறோம், என இப்போது சீனர்களுக்குத் தெரியும்''.

இவ்வாறு உமர் அப்துல்லா தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x