

கர்நாடக முதல்வர் எடியூரப்பா கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதை அவரே தனது ட்விட்டரில் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
ஏற்கெனவே பாஜக மூத்த தலைவரும், உள்துறை அமைச்சருமான அமித் ஷா, உ.பி. மாநில பாஜக தலைவர் ஸ்வதந்திர தேவ்சிங் ஆகியோர் நேற்று கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில் எடியூரப்பாவும் பாதிக்கப்பட்டுள்ளார்.
கர்நாடக முதல்வர் எடியூரப்பா தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்ட கருத்தில், “கரோனா பரிசோதனை செய்து கொண்டதில் எனக்குக் கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இப்போது நல்ல உடல்நிலையில் இருக்கிறேன். மருத்துவர்கள் ஆலோசனைப்படி மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்கிறேன். என்னுடன் கடந்த சில நாட்களாக நெருங்கிய தொடர்பில் இருந்தவர்கள் தயவுசெய்து தனிமைப்படுத்திக் கொண்டு, பரிசோதனை செய்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்’’ எனத் தெரிவித்துள்ளார்,
பெங்களூருவில் உள்ள பழைய விமான நிலையம் அருகே இருக்கும் மணிபால் மருத்துவமனையில் எடியூரப்பா சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
முதல்வர் அலுவலகத்தில் பணியாற்றிய சிலருக்கு கரோனா தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து, கடந்த இரு வாரங்களாக எடியூரப்பா தனது வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டு இருந்தார். அப்போது அவருக்கு நடத்தப்பட்ட கரோனா பரிசோதனையில் கரோனா இல்லை என்பது தெரியந்வந்தது. ஆனால், நேற்று கரோனா தொற்று இருப்பது உறுதியானது.
கர்நாடக அமைச்சரவையில் கரோனாவில் பாதிக்கப்படும் 4-வது உறுப்பினர் எடியூரப்பா ஆவார். இதற்கு முன், வனத்துறை அமைச்சர் ஆனந்த் சிங், சுற்றுலாத் துறை அமைச்சர் டிசி ரவி, வேளாண்துறை அமைச்சர் பி.சி.பாட்டீல் ஆகியோர் கரோனாவில் பாதிக்கப்பட்டிருந்தனர்.
கர்நாடக முதல்வர் எடியூரப்பா விரைவாக குணமடைய காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் முதல்வருமான சித்தராமையா வாழ்த்துக் கூறியுள்ளார். அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “பி.எஸ். எடியூரப்பா விரைவில் குணமடைந்து நல்ல உடல் நிலையுடன் மீண்டும் மக்கள் சேவைக்கு வர வாழ்த்துகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.
கர்நாடக மாநிலத்தில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1.35 லட்சத்தைக் கடந்துள்ளது. 74,590 பேர் சிகிச்சையில் உள்ளனர். 2,496 பேர் கரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.