‘பிசிஜி’ திட்டம் அமலில் உள்ள நாடுகளில் கரோனா வைரஸ் தொற்று பரவல் வேகம் குறைவு: அமெரிக்க விஞ்ஞானிகள் கருத்து
பிசிஜி தடுப்பூசி திட்டம் அமலில் உள்ள நாடுகளில் கரோனா தொற்று பரவலின் வேகம் குறைவாக உள்ளது என்று அமெரிக்க விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
இந்தியா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளில் சிறுவயது முதலே குழந்தைகளுக்கு காசநோய் தடுப்பு (பிசிஜி) மருந்து வழங்கப் படுகிறது. அந்த நாடுகளில் கரோனா வைரஸ் பாதிப்பு குறைவாக உள்ளது. பிசிஜி தடுப்பூசிதிட்டம் அமலில் இல்லாத அமெரிக்கா, இத்தாலி, நெதர்லாந்து, பெல்ஜியம் உள்ளிட்ட நாடுகளில் கரோனா வைரஸ் பரவுவது 4 மடங்கு அதிகமாக உள்ளது என்று அமெரிக்காவின் நியூயார்க் தொழில்நுட்ப கழக (என்.ஒய்.ஐ.டி) விஞ்ஞானிகள் அண்மையில் ஆய்வறிக்கை வெளியிட்டனர்.
அமெரிக்க தலைநகர் வாஷிங்டனை தலைமையிடமாக கொண்டு செயல்படும் ‘அட்வான்ஸ்மென்ட் ஆப் சயின்ஸ் பார் தி அமெரிக் கன் அசோசியேஷனும்’ இதே கருத்தை தெரிவித்துள்ளது. சுமார் 1,20,000-க்கும் மேற்பட்ட விஞ்ஞானிகள், ஆய்வாளர்கள் உறுப்பினர்களாக உள்ள இந்தஅமைப்பு, கரோனா வைரஸ் குறித்து ஆய்வு நடத்தி விரிவானஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளது.
அதில், ‘‘பிசிஜி தடுப்பூசி திட்டம் அமலில் உள்ள நாடுகளில் கரோனா வைரஸ் தொற்று பரவலின் வேகம் குறைவாக உள்ளது. அமெரிக்காவும் பிசிஜிதடுப்பூசி திட்டத்தை அமல்படுத்தியிருந்தால் நாட்டில் கரோனா தொற்று கட்டுக்குள் இருந்திருக்கும். இந்த தடுப்பூசி வைரஸ் பரவல் வேகத்தை குறைக்குமே தவிர, இதுவே சிறந்த மருந்து கிடையாது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் கூறும்போது, ‘‘இந்தியாவில் 16 வகையான கரோனா தடுப்பு மருந்துகள் ஆய்வில் உள்ளன. இதில் பிசிஜி தடுப்பூசியும் ஒன்றாகும். இந்த மருந்தின் 3-ம் கட்ட ஆய்வு தொடர்கிறது’’ என்று தெரிவித்துள்ளார்.
