

புதுடெல்லி: ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதல்வர் மெகபூபா முப்தியை வீட்டுக் காவலில் இருந்து உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார்.
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் சிறப்பு அந்தஸ்து கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 5-ம் தேதி ரத்து செய்யப்பட்டது. இதையடுத்து அம்மாநிலம் 2 யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து அசம்பாவித சம்பவங்கள் ஏதும் நிகழாமல் இருக்க அந்த மாநிலத்தைச் சேர்ந்த முக்கிய தலைவர்கள் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டனர். இதில் முன்னாள் முதல்வர்கள் பரூக் அப்துல்லா, உமர் அப்துல்லா, மெகபூபா முக்தி ஆகியோர் பொது பாதுகாப்பு சட்டத்தின் கீழ் காவலில் வைக்கப்பட்டனர். மெகபூபா முப்தியின் வீட்டுக் காவல் வரும் 5-ம் தேதியுடன் முடிவடைய உள்ள நிலையில், மேலும் மூன்று மாதங்களுக்கு அவரது காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது என ஜம்மு காஷ்மீர் நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதையடுத்து முப்தியை உடனடியாக வீட்டுக் காவலில் இருந்து விடுவிக்க வேண்டும் என்று ராகுல் காந்தி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் ட்விட்டரில் நேற்று, "அரசியல் தலைவர்களை சட்டவிரோதமாக நீண்ட நாட்களாக வீட்டுக் காவலில் வைத்து இந்திய ஜனநாயகத்தை மத்திய அரசு சேதப்படுத்தியுள்ளது. நீண்ட நாட்களாக வீட்டுக் காவலில் இருக்கும் முன்னாள் முதல்வர் மெகபூபா முப்தியை உடனடியாக விடுவிக்க வேண்டிய நேரம் இது" என கூறியுள்ளார். கடந்த சில மாதங்களாக கரோனா வைரஸ் பிரச்சினை, சீன ஆக்கிரமிப்பு உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களில் மத்திய அரசை சமூக வலைதளங்களில் ராகுல் காந்தி விமர்சித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.