

திருப்பதி ஏழுமலையான் கோயில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா நேற்று மாலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. ஆந்திர அரசு சார்பில் முதல்வர் சந்திரபாபு நாயுடு பட்டு வஸ்திரங்களை காணிக்கையாக வழங்கினார்.
கொடியேற்ற விழாவுக்கு முன்னதாக மூலவருக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. இதையடுத்து கோயில் வளாகத்தில் உள்ள தங்க கொடி மரத்தில், வேத மந்திரங்கள் முழங்க கருடச் சின்னம் பொறிக்கப்பட்ட கொடி ஏற்றப்பட்டது. அப்போது, அங்கிருந்த பக்தர்கள் பக்திப் பரவசத்துடன் ‘கோவிந்தா கோவிந்தா’ என முழக்கமிட்டனர்.
முப்பத்து முக்கோடி தேவர் களுக்கும் பிரம்மோற்சவ விழா அழைப்பு விடுப்பதற்காக கொடி ஏற்றப்படுவதாக ஐதீகம். பிரம் மோற்சவ விழாவையொட்டி கோயில் வளாகம் முழுவதும் வண்ண மலர்களாலும், மின் விளக்குகளாலும் அலங்கரிக்கப் பட்டிருந்தது.
திருப்பதி ஏழுமலையான் பிரம் மோற்சவ விழாவின் போது ஆந்திர அரசு சார்பில் ஆண்டுதோறும் பட்டு வஸ்திரங்கள் காணிக்கையாக வழங்குவது வழக்கம். 1978-ம் ஆண்டு முதல் இந்த சம்பிரதாயம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதன்படி நேற்று இரவு திருமலை யில் உள்ள பேடி ஆஞ்சநேயர் கோயில் வளாகத்தில் இருந்து முதல்வர் சந்திரபாபு நாயுடு பட்டு வஸ்திரங்களை தலையில் சுமந்து சென்று, காணிக்கையாக வழங்கி னார். பின்னர் அவர் சுவாமி தரிசனம் செய்தார். அவருக்கு தேவஸ்தானம் சார்பில் தீர்த்த பிரசாதங்கள் வழங்கி கவுரவித்தனர்.
பிரம்மோற்சவத்தில் முதல் வாகன சேவையாக ஆதிசேஷனாக கருதப்படும் பெரிய சேஷ வாகனத்தில் தேவி, பூதேவி சமேதராக மலையப்ப சுவாமி நேற்று எழுந்தருளினார். இரவு 9 மணி முதல் 11 மணி வரை திருமாட வீதிகளில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். மாட வீதிகளில் வாகன சேவைக்கு முன் யானை, குதிரை பரிவட்டங்கள் சென்றன. வேத பண்டிதர்கள் வேதங்கள் முழங்க பெரிய ஜீயர், சின்ன ஜீயர் சுவாமிகள் குழுவினர் சென்றனர். இதைத் தொடர்ந்து பல மாநிலங்களில் இருந்து வந்திருந்த பல குழுவினர் பஜனைகள் பாடியும், நடனமாடியும் சென்றனர். கோலாட்டம், ஒயிலாட்டம், மயிலாட்டம் என வாகன சேவையின் முன் பல்வேறு கலை நிகழ்ச்சிகளும் நடந்தன. 4 மாட வீதிகளிலும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் உற்சவ மூர்த்திகளுக்கு ஆரத்தி எடுத்து வணங்கினர்.
பிரம்மோற்சவத்தின் இரண்டாம் நாளான இன்று காலை வாசுகியாக கருதப்படும் சிறிய சேஷ வாகனத்திலும், இரவு ஹம்ச (அன்னம்) வாகனத்திலும் உற்சவர் திருவீதியுலா வருகிறார்.
6 லட்சம் லட்டு பிரசாதம் தயார்
திருமலை-திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் சதலவாடா கிருஷ்ணமூர்த்தி நேற்று கூறியதாவது:
பிரம்மோற்சவ விழாவில் லட்டு பிரசாதம் தட்டுபாடு ஏற்படாத வகையில் 6 லட்சம் லட்டுகள் தயாராக வைக்கப்பட்டுள்ளன. தினமும் 3 லட்சம் லட்டு பிரசாதங்கள் விநியோகம் செய்யப்படுகிறது. மேலும் 20-ம் தேதி கருட சேவையன்று சுமார் 5 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. திருமாட வீதிகளில் ஒரே சமயத்தில் 3 லட்சம் பக்தர்கள் வாகன சேவையை காண்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பிரம்மோற்சவ சமயங்களில் சாமானிய பக்தர்களுக்கு முன்னுரிமை வழங்கும் விதத்தில் விஐபி பிரேக் தரிசனம் கணிசமாக குறைக்கப்பட்டுள்ளது என்றார்.