

புதிய தேசியக் கல்விக் கொள்கையில் பள்ளியின் மேல்நிலை மாணவர்கள் தங்கள் விருப்பப் பாடமாக அயல்நாட்டு மொழிகளைத் தேர்ந்தெடுக்கும் பட்டியலில் இருந்து சீன மொழியான மாண்டரின் நீக்கப்பட்டுள்ளது.
கடந்த 2019-ம் ஆண்டு மத்திய அரசு வெளியிட்ட தேசியக் கல்விக் கொள்கை வரைவு அறிக்கையில் மாண்டரின் மொழி இடம்பெற்றிருந்த நிலையில் இப்போது இடம் பெறவில்லை.
புதிய தேசியக் கல்விக் கொள்கையைக் கடந்த சில நாட்களுக்கு முன் மத்திய அரசு வெளியிட்டிருந்தது. அதில் பள்ளி மேல்நிலை வகுப்பு மாணவர்கள் உள்நாட்டு மொழி தவிர்த்து அயல்நாட்டு மொழிகளைக் கற்க வசதி செய்யப்பட்டிருந்தது. அயல்நாட்டுக் கலாச்சாரத்தையும், பாரம்பரியத்தையும் கற்றுக்கொள்ள மொழி உதவியாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
அதன்படி, ஆங்கிலம் தவிர்த்து கொரியன், திபெத்தியன், மலாய், நேபாளி, அரபி, ஜப்பானீஸ், தாய், பிரெஞ்சு, ஜெர்மன், ஸ்பானிஷ், போர்ச்சுகீஸ், ரஷ்ய ஆகிய மொழிகளை விருப்பப்பாடமாக மேல்நிலை வகுப்பு மாணவர்கள் தேர்வு செய்து படிக்க முடியும் எனக் குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால், இதில் சீனாவில் பெரும்பான்மையாகப் பேசப்படும் மாண்டரின் மொழி இடம் பெறவில்லை.
கடந்த ஆண்டு வெளியிட்ட வரைவு அறிக்கையில் மாண்டரின் மொழி இடம் பெற்ற நிலையில் இப்போது நீக்கப்பட்டிருப்பது ஏன் எனத் தெரியவில்லை. சீன மொழி கற்பிக்கப்படாதா என்பதும் தெரியவில்லை. இது குறித்து மத்திய அரசு சார்பில் எந்த விளக்கமும் அளிக்கப்படவில்லை.
சீன மொழி கைவிடப்பட்டதா என்று மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்திடம் கேட்டபோது எந்தவிதமான பதிலும் தெரிவிக்க மறுத்துவிட்டது.
கிழக்கு லடாக் எல்லையில் சீனா, இந்திய ராணுவத்துக்கும் இடையே ஏற்பட்ட மோதலுக்குப் பின் பல்வேறு அதிரடி நடவடிக்ககைளை மத்திய அரசு எடுத்துவருகிறது. அதன் ஒருபகுதியாக மாண்டரின் மொழி நீக்கப்பட்டுள்ளதாக அரசியல் நோக்கர்கள் தெரிவிக்கின்றனர்.