Last Updated : 02 Aug, 2020 03:16 PM

 

Published : 02 Aug 2020 03:16 PM
Last Updated : 02 Aug 2020 03:16 PM

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மதிய உணவோடு காலை உணவும் கூடுதலாக வழங்க வேண்டும்: புதிய கல்விக் கொள்கையில் பரிந்துரை

கோப்புப்படம்

புதுடெல்லி

அரசுப் பள்ளி மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு மதிய உணவோடு, காலை உணவும் சேர்த்து வழங்கப்பட வேண்டும் என்று புதிய கல்விக் கொள்கையில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவை புதிய கல்விக் கொள்கைக்கு ஜூலை 29-ம் தேதி ஒப்புதல் அளித்தது. அதில் பல்வேறு முக்கிய அம்சங்கள் இடம் பெற்றுள்ளன. இதில் முக்கியமானது மாணவர்களுக்கு காலை நேர உணவு வழங்கும் திட்டமாகும்.

அதாவது மாணவர்கள் கல்வி கற்பதற்கு மதிய உணவு மட்டுமல்ல, காலை நேரத்தில் சத்தான உணவும் அவசியம். குழந்தைகளின் மூளை சுறுசுறுப்பாகவும், ஆக்கபூர்வமாகச் சிந்திக்கவும், சத்துள்ள காலை உணவு தேவை என்று கூறப்பட்டுள்ளது.

இது தொடர்பாக புதிய கல்விக் கொள்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

''குழந்தைகள் சத்துக் குறைபாட்டுடன் இருந்தாலோ அல்லது நல்ல உடல்நிலையில் இல்லாவிட்டாலோ அவர்களால் முழுமையாகக் கல்வி கற்க முடியாது. ஆதலால், அவர்களுக்குரிய மனவளத்தையும் மற்றும் சுத்துள்ள உணவையும் வழங்க வேண்டும். பள்ளி முறையில் சிறந்த பணியாளர்கள், கவுன்சிலர்கள் மூலம் சமூகத்துடன் ஈடுபாட்டை உருவாக்கலாம்.

காலையில் சத்தான உணவுக்குப் பின் மாணவர்கள் படிக்கும்போது ஆக்கபூர்வமாகச் செயல்பட முடியும், பாடங்களில் அதிகமான ஆர்வமும் ஏற்படும் என பல்வேறு மருத்துவ ஆய்வுகள் தெரிவிக்கின்றன. ஆதலால், மதிய உணவு வழங்குவதோடு காலை நேரத்தில் மாணவர்களுக்கு எளிமையான சத்தான உணவும் வழங்கிட வேண்டும்.

காலை உணவு சூடாகத் தயாரிக்க முடியாத சூழலில் இருக்கும் பள்ளிக் கூடங்களில் மாணவர்களுக்குக் காலை நேரத்தில் வேர்க்கடலை, கொண்டைக்கடலை போன்றவற்றை வெல்லத்துடன் வேகவைத்து வழங்கலாம். உள்ளூரில் கிடைக்கும் பழவகைகளை வழங்கலாம்.

அனைத்துக் குழந்தைகளும் குறிப்பிட்ட கால இடைவெளியில் முறைப்படி உடல் பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டும். பள்ளிகளில் பயிலும் குழந்தைகள் அனைவரும் 100 சதவீதம் தடுப்பூசி போடப்பட்டு இருப்பதை உறுதி செய்ய வேண்டும். மாணவர்கள் ஒவ்வொருவருக்கும் சுகாதார அட்டை தொடங்கி அதைப் பள்ளி நிர்வாகம் பராமரிக்க வேண்டும்.

5 வயதுக்குமுன் உள்ள அனைத்துக் குழந்தைகளும் தயாரிப்பு வகுப்புக்கு (அங்கன்வாடி) உட்படுத்த வேண்டும். குழந்தைகள் படிக்கும்போது, அவர்களுக்குப் பாடங்களையும் எண்களையும் விளையாட்டின் மூலம் புரியும் வகையில் அடிப்படையில் இருந்தே கற்பித்தால் அவர்களின் அறிவாற்றல், திறன், உளவியல் வளர்ச்சி அடையும்.

தயாரிப்பு நிலையில் இருக்கும் குழந்தைகளுக்கு மதிய உணவுத் திட்டமும் வழங்கிட வேண்டும். அங்கன்வாடி குழந்தைகளுக்கும் குறிப்பிட்ட கால இடைவெளியில் உடல்நலப் பரிசோதனை நடத்தப்பட வேண்டும்''.

இவ்வாறு அதில் தெரிவி்க்கப்பட்டுள்ளது.

தேசிய மதிய உணவுத் திட்டம் என்பது பள்ளிகளில் பயிலும் ஒன்று முதல் 8-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு மதிய உணவு இலவசமாக வழங்கும் திட்டமாகும். இதை மத்திய அரசின் நேரடி உதவியில் அரசுப் பள்ளிகளுக்கும், அரசு உதவிபெறும் பள்ளிகள், சிறப்பு பயிற்சிப் பள்ளிகள், மதரஸாக்களுக்கும் வழங்கப்படுகிறது.

இந்தத் திட்டத்தில் குறைந்தபட்சம் நாடுமுழுவதும் 11.59 கோடி குழந்தைகள் பயன்பெற்று வருகின்றனர், இந்தத் திட்டத்தின் மூலம் 26 லட்சம் பேர் வேலை பெற்றுள்ளனர்.

இதுகுறித்து மத்திய மனிதவளத்துறை அமைச்சகத்தின் மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், “ தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின் படி 1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை அதாவது 14 வயதுவரையில் உள்ள மாணவர்களுக்குப் பள்ளி நாட்களில் ஒருவேளை உணவு அதாவது மதிய உணவு வழங்குவது கட்டாயமாகும். சில மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் தங்களின் சூழலுக்கு ஏற்ப குழந்தைகளுக்குப் பால், முட்டை, பழங்கள், பருப்பு வகைகளை வழங்குகின்றன” எனத் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x